“டெரரிஸ்ட் டிராக்” புதிய செயலியை கண்டுபிடித்தவருக்கு நேர்ந்த சோகம் ! “ஜிகிரி தோஸ்த்” விமர்சனம்
பிரதீப் ஜோஸ், எஸ்.பி. அர்ஜுனுடன் இணைந்து, தயாரித்ததோடு, அரண் இயக்கி, நடித்துள்ள படம் “ஜிகிரி தோஸ்த்”. ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி, வி.ஜே ஆஷிக், பவித்ரா லட்சுமி, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைப்படி… நடிகராக முயற்சி செய்யும் ரிஷி, விஞ்ஞானியாக முயற்சி செய்யும் விக்கி, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத லோகி ஆகிய மூவரும் பால்ய கால நண்பர்கள். விக்கியின் பிறந்த நாளன்று அவர் கண்டுபிடித்த “டெரரிஸ்ட் டிராக்” என்கிற புதிய செயலியை கல்லூரியில் செய்துகாண்பிக்க முயலும்போது சில இடையூறுகள் ஏற்பட, அவரது உழைப்பு நிரூபிக்க முடியாமல் போகிறது. அதே சமயம் அந்த செய்தி தெரிந்ததும் நண்பர்கள் இருவரும் கல்லூரிக்கு வந்து விக்கியை சமாதானம் செய்து, அவரது பிறந்தநாளை கொண்டாட மகாபலிபுரத்திற்கு காரில் செல்கின்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த கார் இவர்களது காரில் மோதுவது போல் வந்து நிற்க, இவர்களுக்கும் அந்த காரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. அப்போது அந்த காரில் ஒரு பெண் உதவி கேட்க, அந்த காரில் ஒரு பெண் கடத்தப்படுவதை உணர்ந்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என அந்தக்காரை பின்தொடர்ந்தது செல்கின்றனர்.
பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகிலிருந்து விக்கி கண்டுபிடித்துள்ள ரெடரிஸ்ட் டிராக் கருவியின் மூலம், அந்த பகுதிலிருந்து பேசப்படும் செல்போன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு பதிவு செய்கின்றனர். அதில் இவர்கள் எதிர்பாராத முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன்பிறகு அந்தப் பெண்ணை இவர்கள் காப்பாற்றினார்களா ? நண்பர்களின் லட்சியங்கள் நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக கொடுக்க இயக்குநர் முயற்சித்துள்ளார்.