வாடகைக்கு செல்லும் வாகனங்கள் எலும்புக்கூடுகளாக மீட்பு..! : நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது குப்புசாமிநாயுடுபுரம். இப்பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருபவர் மார்ட்டின் ராஜா. தனது மனைவி குழந்தைகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் மார்ட்டின் ராஜை ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ட்டின் ராஜ் கடந்த ஓராண்டிற்கு முன்பு சுமார் 10 லட்சம் மதிப்பிலான மகேந்திரா பிக்அப் சரக்கு வாகனத்தை புதிதாக வாங்கியுள்ளார். சொற்ப பணத்தை முன்பணமாக செலுத்தி நிதி நிறுவனத்தில் கடன் பெற்று வாங்கியுள்ளார்.


மேலும் பல்லடத்தின் பிரதான தொழிலான கறிக்கோழி உற்பத்தியில் கோழி குஞ்சுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா மாநிலத்திற்கு வாடகைக்கு கொண்டு சென்று இறக்கிவரும் தொழிலில் பிக் அப் வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளார்.
இதனிடையே வருமானம் குறைந்ததால் தவணைக்கட்ட சிரமப்பட்ட மார்ட்டின்ராஜை அணுகிய அவரது நண்பர் தனக்கு தெரிந்த ந்ண்பர் மூலமாக நாள் வாடைக்கு அதிக பணம் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மார்ட்டின் ராஜ் நண்பரின் பேச்சை ஒப்புக்கொள்ளவே கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் என்பவரை அறிமுகம் செய்துள்ளார். பார்ப்பதற்கு டிப்டாப் ஆக இருந்த சம்பத்குமார்தின வாடகையாக ரூ. 2500/- தருவதாக பேசி பிக் அப் வாகனத்தை கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி எடுத்துச்சென்றுள்ளார்.


பின்னர் பல நாட்கள் தொடர்பில்லாமல் இருந்ததால் சம்பத்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு மார்ட்டின் ராஜ் கேட்டபோது சிவகாசிக்கு வாடகைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார், மேலும் வாகனம் சிவகாசி சென்றால் பாஸ்டேக் டோல் கடக்கவில்லை என கேட்டதற்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார், மேலும் ஒரு கட்டத்தில் என்ன பிரச்சனை நடந்தது எனவும், திருடிட்டா சென்றுவிட்டேன் என அதட்டல் தொனியில் பேசியுள்ளார். மேலும் எப்போது சம்பத்குமாரை தொடர்புகொண்டாலும் செட்டில்மெண்ட் செய்துவிடுவதாக கூறிவந்துள்ளார்.
இதனிடையே வாகனத்தை தனது நண்பர்கள் மூலம் தேட ஆரம்பித்துள்ளார் மார்ட்டின் ராஜ்.. இதனிடையே பழைய பொருட்களை வாங்க மேட்டுப்பாளையம் சென்ற ஒருவர் மார்ட்டினின் பிக் அப் வாகனம் பார்ட் பார்ட்டாக பிரிக்கப்பட்டு பழைய இரும்பு கடையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மார்ட்டின் ராஜிற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து சம்பவம் குறித்து பல்லடம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து பல்லடம் போலீசார் மேட்டுப்பாளையம் போலீசாருடன் இணைந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள பழைய இரும்புக்கடையில் பார்ட் பார்ட்டாக இருந்த வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சம்பத்குமார் மார்ட்டின்ராஜின் வாகனத்தை வாடகைக்கு பேசி நூதன முறையில் போலி ஆவணங்கள் தயாரித்து மேட்டுப்பாளையத்தில் உள்ள பழைய இரும்புக்கடையில் ரூபாய். 3 லட்சத்திற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து மோசடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மார்ட்டின் ராஜ் வாகனத்தை மீட்கப்பட்ட பழைய இரும்புக்கடையில் பெரும்பாலும் புதிய வாகனங்கள் தான் அதிக அளவில் நிறுத்தப்படிருந்ததாகவும், இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள சம்பத்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மார்ட்டின்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
– நமது நிருபர்