தேசிய அரசியலாகும் ஆளுநர் விவகாரம்..! வரம்பு மீறும் தமிழிசை..!
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக்கோரி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஜனாதிபதி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறார்கள் என்றதும் தமிழக விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்து அதற்கு மாற்றான சட்ட முன்வடிவுக்கு கூட அனுமதி வழங்காமல் இருந்து வருகிறார். இதற்கு ஆன்லைன் சூதாட்டத்திற்கும், ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருக்கிறதா என திமுக செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் வகையில் அரசியலமைப்பு சாசனம் தனக்கு வழங்காத அதிகாரத்தை தனக்கு வழங்கியதாக நினைத்து எவ்வாறு செயல்படுகிறார்? தேவையில்லாத பேச்சுக்களை எப்படி பேசி வருகிறார்? என்கிற விவகாரம் தேசிய அளவில் தெரியப்படுத்தும் வகையில் திமுகவும் அதன்கூட்டணி கட்சிகளும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஆளும் மாநிலங்கள் தவிர்த்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுத்து வருகிறது. இதற்கு உதாரணமாக பஞ்சாப், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நிர்வாக ரீதியாக ஆளுநர்கள் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ரவி சித்தாந்த ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் விழாக்களில் சனாதனம் பற்றிய பேச்சுக்களை தொடர்ந்து பேசி வருகிறார். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்கின்றன. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் பட்டியலில் உள்ள 195 நாடுகளில் 30 நாடுகள் மட்டுமே ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றும் நாடுகளாக இருக்கின்றன. 160 நாடுகள் மதச்சார்பற்ற நாடுகளாகத்தான் இருக்கின்றன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் அரசியலமைப்பு சாசனம் கூறுகிறது. இதையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு இந்தியா மதத்தைச் சார்ந்து இருக்கும் நாடு என தமிழக ஆளுநர் பேசி வருகிறார்.
தமிழக ஆளுநராக இருக்கும் ரவி, ஆளுநர் வேலையைத் தவிர்த்து ஆர்எஸ்எஸ் அஜண்டாவை தமிழகத்தில் நிறைவேற்றுவதற்காக தற்போது பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளாரா என்கிற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் அரசியல் ரீதியாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைமைகள் இருந்தாலும், கலாச்சார ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு தனித்துதான் நிற்கிறது. இதனை தகர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு, மாநில ஆளுநர் என தமிழக அரசுக்கு மும்முனை தாக்குதலை நடத்த ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர்கள் வேண்டுமானால் இந்தியா மதத்தை சார்ந்த நாடு என அரசியலுக்காக பேசலாம். ஆனால் அரசியல் சாசனத்தின் படி பதவி வகிக்கும் ஆளுநர் இப்படி பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தமிழக ஆளுநரின் பேச்சுக்கு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்திரராஜன் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி இந்திய நாட்டின் பிரஜை என்கிற வகையில் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஒன்றும் தவறு இல்லை என பேசியுள்ளார். உலகில் பெரும்பாலான நாடுகள் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்கிற கருத்தை சொல்கிற உரிமை அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம். ஆனால் ஆளுநர்களாக இருக்கும் ரவிக்கோ, தமிழிசைக்கோ அரசியல் சாசனத்தின்படி கிடையாது.
தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணிக் கட்சியினருக்கும் நடக்கும் பிரச்சனையில் வேறொரு மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசைக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழகத்தின் பிரச்சனையில் வேறு மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை தலையிட்டு வரம்பு மீறி பேட்டி கொடுத்ததே அரசியலமைப்பு சாசனப்படி தவறு. தமிழிசை ஏன் வரம்புமீறி தமிழ்நாட்டு விஷயங்களில் தலையிடுகிறார் என்றால் தெலுங்கானாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழிசையை திரும்பபெறக் கோரி ஜனாதிபதியிடம் கடிதம் கொடுக்க இருக்கிறார்கள். அதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயான பிரச்சனையில் இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருக்கும் தமிழிசை அரசியல் சாசனத்தையே அவமதித்து பேசியுள்ளார். கருத்துக்களை பேசுவது என்பது வேறு. அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசுவது என்பது வேறு என்பதை புரிந்து ஆளுநர்கள் பேசவேண்டும் என்பதே பொதுநல நோக்கர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
– சூரியன்