தமிழகம்

பிரதமர் கிசான் திட்ட முறைகேடு… : துணை போன அதிகாரிகள்..!

பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும். இந்த நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி பயனாளிகளாக சேர்ந்து, இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இத்திட்டத்தில் ரூ.110 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரண மேற்கொண்டு வரும் சிபிசிஐடி அதிகாரிகள் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது தவிர, வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவினரும் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், அஜித், முகிலன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகரன், தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் சுமதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற 14 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், இரண்டு தனியார் கணினி சேவை மைய உரிமையாளர்களான ராகுல் மற்றும் கலையரசனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், 6 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து நிதியுதவி 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ 2.25 கோடி, திருச்சி மாவட்டத்தில் 94 லட்சம், நாமக்கல்லில் 24.80 லட்சம் என போலி விவசாயிகளிடத்திலிருந்து பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது போல, பல மாவட்டங்களிலிருந்தும் நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு வேளாண் துறை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இந்தத் திட்டத்துக்கான இணையதள பக்கத்தில் பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும். புதிய கடவுச் சொல் உருவாக்கப்பட்டு அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இந்த கடவுச்சொல்லை மாவட்டங்களில் உள்ள வேளாண் இணை இயக்குனர்கள் ‘மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர் தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியான துணை இயக்குனர் ஒருவருக்கு மட்டுமே கடவுச் சொல் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இந்த கடவுச்சொல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அல்லது துணை இயக்குனர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகாரம் அளிக்கப்படாத பிற நபர்கள் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தவர், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திண்டிவனம் அருகே உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அரசு மருத்துவர்களின் அயராத முயற்சியால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

உழவர் உதவித்திட்ட முறைகேடு தொடர்பாக பேசிய முதலமைச்சர், விவசாயிகள் தானாகப் பதிவு செய்யும் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதுதான் அதற்கு காரணம் எனக் குறிப்பிட்டார். முறைகேட்டில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 34 அலுவலர்கள் மீது வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழகத்தில் கிசான் நிதி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் தனது கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் கிசான் நிதி திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்று தெரிவித்த நரேந்திர சிங் தோமர், நிலம் வைத்துள்ள, நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயி யார் என்பதை கண்டறிவது மாநில அரசின் பொறுப்பு என்றும், தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட கிசான் உதவி நிதி ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸார் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்து 16 பேரை கைது செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 19 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கணினி கடவுச் சொற்களை திருடி சிலர் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல் தெரிவித்துள்ளார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button