கோடிக்கணக்கான பணமோசடி விவகாரம்… : எல்லை தாண்டியதா திருப்பூர் மாநகர காவல்..?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட மேற்கு பல்லடத்தில் வசித்து வருபவர் சதீஸ்குமார் (32). பிகாம் பட்டதாரி வாலிபரான சதீஸ்குமார் பல்லடத்தில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். மேலும் மணி டிரான்ஸ்வர், மொபைல் ரீச்சார்ஜ், மொபைல் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பல்லடத்தை அடுத்த மின்நகர் பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவருடன் சதீஸ்குமாருக்கு பழக்கம் ஏற்படுகிறது. ஆன்லைனில் ரமேஷ் என்பவருக்கு பணம் அனுப்ப கடைக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே தனது நண்பர் ரமேஷிற்கு 10 கோடி அளவிற்கு பணம் வரவிருப்பதாகவும் அதில் தனக்கு 3 கோடி அளவிற்கு பங்கு தொகை கிடைக்கும் என சதீஸ்குமாரிடம் கூறியுள்ளார். பின்னிட்டு மேற்படி பணம் கிடைக்க தனக்கு பண உதவி செய்தால் பல மடங்கு தொகையை திருப்பி தருவதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக ரூபாய் 50 லட்சம் வரை நூதன முறையில் ரமேஷ் மற்றும் தனது நண்பர்கள் பெயரிலும் ஆன்லைனில் பணம் பெற்றுள்ளார்.
சதீஸ்குமார் தன்னிடம் உள்ள கிரெடிட் கார்டு, நகை மற்றும் வங்கிகளில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதனிடையே கொடுத்த பணம் குறித்து மாரிச்சாமியிடம் சதீஷ்குமார் கேட்டபோதெல்லாம் ஊத்தங்கரை, மேட்டுப்பாளையம், திருச்சி, சிவகங்கை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு மாரிச்சாமியை அழைத்துச்சென்று ஆடம்பர ஆடி காரில் ரமேஷை வரவழைத்து சாக்கு போக்குச்சொல்லி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் சதுரங்க வேட்டை பாணியில் தன்னை ஏமாற்றி வருவதை அறிந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டுள்ளார். இதனை அடுத்து மாரிச்சாமி ரமேஷிடம் பேசி மிரட்டல் ஆடியோவை சதீஷிற்கு அனுப்பிவைக்க அச்சத்தில் உறைந்து போயுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியும் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனிடையே வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை கேட்டு வங்கிகள் நெருக்கடி கொடுக்கவே ஒரு கட்டத்தில் கடையை பூட்டிவிட்டு ஊரைவிட்டே ஓடி திருத்தணி, திருவண்ணாமலை, மதுரை என கோயில்களில் தங்கியுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகமாகவே திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சதீஷ்குமார் புகார் மனு அளித்துள்ளார்.
இதனை அடுத்து சதுரங்க வேட்டை பாணியில் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த மாரிச்சாமி மற்றும் ரமேஷ் மீது விசாரணை மேற்கொள்ள பல்லடம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மோசடியில் ஈடுபட்ட ரமேஷ் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்லடம் குப்புசாமி நாயுடுபுரத்தில் தனது தந்தை திருமூர்த்தியுடம் வசித்து வந்த ரமேஷ் ஆரம்பத்தில் பிரபல நகைக்கடையின் பல்லடம் கிளையில் ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளதாகவும், பின்னர் பாதி விலையில் தங்கம் வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாரிச்சாமி தூத்துக்குடி மாவட்டம் தட்டாம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும், பெரும்பாளி பகுதியில் இயங்கிவரும் ஏற்றுமதி மருந்து துணி தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த மாதம் 18 ஆம் தேதி திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஆர். மனு ஏற்பு ரசீது எண்: 218/2023 ஆக பதிவு செய்து அளித்துள்ளனர். அந்த மனுவில் மாரிச்சாமி ரமேஷிற்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்த வகையில் ரூபாய் 2 கோடி வரை பெற்று கொடுக்க மறுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் பதுங்கியிருந்த ரமேஷை பிடித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே 2 கோடி அளவிலான பண பரிவர்த்தனை குறித்து அசால்ட்டாக காவல் நிலையத்தில் விசாரித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மாரிச்சாமி குடியிருப்பது பல்லடத்தை அடுத்த மின்நகர் பகுதி பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மேற்படி இடம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்டதாகும், ஆனால் சிறுபூலுவபட்டி முகவரியில் புகார் மனு பெற்று 2 கோடி மதிப்பிலான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்கவேண்டிய வழக்கை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் நடந்திருப்பது சாதாரண குற்றமாக தோன்றவில்லை, ஒரு கும்பலே ரமேஷ் தலைமையில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து பல இளைஞர்களையும் அப்பாவிகளையும் குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2 கோடி அளவிற்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அமலாக்கத்துறையின் பார்வை பல்லடத்திற்கு தேவை என பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பதாக உள்ளது.
– நமது நிருபர்