கோலார்பட்டி அரசு மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வருமா…? தமிழக அரசு….!
கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கை நடைமுறைப் படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காக்கும் வகையில் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோலார்பட்டியில் அரசு மருத்துவமனையை கடந்த 2018 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் திறந்து வைத்தனர். ஆனால் இந்த மருத்துவமனை இன்று வரை முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவு ,குழந்தைகள் நலப்பிரிவு , கண் மருத்துவ பிரிவு , மற்றும் இருதய நலப்பிரிவு போன்றவற்றிற்கு புதிய கட்டிடங்கள் இருந்தும் அவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனை எப்போதும் காலியாகவே இருக்கிறது.
கோலார்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏதாவது அவசர சிகிச்சைக்காக கோலார்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றால் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட சுகாதாரப் பணியாளர்கள் யாரும் மருத்துவமனையில் இருப்பதில்லை. இந்தப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டுமானால் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கோ அல்லது இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டைக்கோ சென்று தான் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட பயண்படாத அரசு மருத்துவமனை கோலார்பட்டியில் இருப்பதால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை. கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. சுற்று வட்டாரத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதாவது மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் கோயம்புத்தூருக்குத் தான் செல்ல வேண்டும். நீண்ட தூரம் பயணிப்பதற்குள் உயிர் பிரிந்து விடும் அபாயத்தில் தான் இருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
மருத்துவமனை ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் மருத்துவர்களும் மருத்துவமனைக்கு தேவையான ஊழியர்களும் மருத்துவமனைக்கு வருவதே கிடையாது. பேரிடர் காலத்திலாவது மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து இப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்கிறார்கள். இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய நல்ல காரியங்களை புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியாளர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இப்பகுதி மக்கள் மத்தியில் உள்ளது. கோலார்பட்டி அரசு மருத்துவமனையை பேரிடர் காலத்தில் உடனடியாக மக்களின் பயண்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையும் , நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…..
*ஆனந்த குமார்*
கோவை செய்தியாளர்.