சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள தமிழ்நாடு கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, இதயநோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதுடன், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவும் ஏற்படுவதால், ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
‘தமிழ்நாடு கெமிக்கல் புராடக்ட்ஸ் லிமிடெட் (டி.சி.பி.எல்)’ சல்பேட் கந்தகம் தயாரிக்கும் ஆலை, காரைக்குடி அருகே கோவிலூர் கிராமத்தில், 1972-ல் அப்போதைய தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்டது. இப்போது ராஜசேகரன் என்பவர் குத்தகைக்கு எடுத்து ஆலையை நடத்துகிறார். ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள், நேரடியாக விவசாயக் கண்மாய்களில் விடப்படுகின்றன. கழிவுகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால்தான் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிறார்கள் மக்கள். இதனால், ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடுமாறு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காரைக்குடி எம்.எல்.ஏ ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தை, சில மாதங்களுக்கு முன் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்படி, டிசம்பர் 21-ம் தேதி, ஆலையைச் சுற்றிலும் 20 இடங்களிலிருந்து மண், தண்ணீர் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகியான மாறன், “2015-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையில் கொதிகலன் கசிவு ஏற்பட்டபோது, சுற்றுவட்டார மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எடுத்த மண், தண்ணீர், காற்று ஆகியவற்றைப் பரிசோதனை செய்ததில் அவை மூன்றுமே மாசுபட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. காரைக்குடி முழுவதற்கும் குடிநீர் சப்ளை செய்யும் ஊற்றுத் தண்ணீரே மாசுபட்டுள்ளது. அந்தத் தண்ணீர் ‘குடிக்கத் தகுதியற்றது’ என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது. பசுமைத் தீர்ப்பாயத்தில் கெமிக்கல் ஆலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். மூன்று மாதங்கள்வரை, அந்த ஆலை மூடப்பட்டது. ஆனால், சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஆலை திறக்கப்பட்டுவிட்டது. கெமிக்கல் ஆலையால் இப்பகுதி மக்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, எங்கள் கிராமத்தினருக்கு பெண் கொடுக்கவோ, பெண் எடுக்கவோ வெளியூரைச்சேர்ந்தவர்கள் முன்வருவதில்லை” என்றார் வருத்தத்துடன்.
இதுகுறித்து கோவிலூர் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அழகப்பன் கூறுகையில், “ஆலை தொடங்கப்பட்டு, ஐந்தாண்டுகள் வரை பாதிப்புகள் இல்லை. அதன் பின்னர்தான் பாதிப்புகள் தெரிய ஆரம்பித்தன. கடந்த 30 வருடங்களாக இந்தப் பகுதியில் நாங்கள் மேற்கொண்ட எந்த விவசாயமும் பலன் அளிக்கவில்லை. இதுவரை 800 ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் அழிந்துள்ளது. விவசாயிகளுக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக இந்த ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறுவதைத் தவிர, வேறுவழியில்லை” என்றார்.
பா.ம.க-வின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திருஞானம், “டி.சி.பி.எல் ஆலையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கெமிக்கல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த நாடுகளில் இதுபோன்ற விஷவாயு உமிழும் தொழிற்சாலைகள் நடத்த அனுமதி இல்லை. இங்கிருக்கும் மக்கள்தான் இந்தத் தொழிற்சாலைக்குப் பலிகடாவாக இருக்கிறோம்” என்றார்.
“கோவிலூர் கெமிக்கல் ஆலையில் இருந்து வெளியேறும் கந்தகக் கழிவு மற்றும் அதிலிருந்து வெளியேறும் புகையைச் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசிய மருத்துவர் ஒருவர், “நீர், நிலம், காற்று மூன்றையும் ரசாயன ஆலையிலிருந்து வெளியேறும் ‘சல்பேட்’ மாசுபடுத்தியிருக்கிறது. கோவிலூர் கிராம மக்கள், நச்சுப்புகையை பல வருடங்களாகச் சுவாசித்து வருகிறார்கள். இதனால் சிறுநீரகப் பாதிப்பு, சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு, தோல் அரிப்பு, ஆண்களின் உயிரணுக்கள் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும் சாத்தியங்கள் உள்ளன. மக்கள் சுவாசிக்கும் ‘சல்பர்’ புகை, ரத்தத்தில் கலந்துவிடுவதால் இதைத் தவிர்க்க இயலாது” என்றார்.
கோவிலூர் கெமிக்கல் ஆலையின் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் பாலசுந்தரத்திடம் பேசினோம். அவர், “தமிழ்நாடு கெமிக்கல் ஆலையால், கோவிலூர் கிராமத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. சிலர் புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். எங்கள் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள். அப்படி பாதிப்பு என்றால் நாங்களும் அந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே. புற்றுநோய், கிட்னி பாதிப்பு என்று சொல்வதெல்லாம் சுத்தப்பொய்” என்றார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காரைக்குடி டி.சி.பி.எல் ரசாயன ஆலையின் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் தாக்கம் உள்ளது, விவசாயம் பாதிக்கப்படுகிறது. கோவிலூர் கண்மாய் ரசாயனக் கழிவுகளால் நிரம்பியுள்ளது என்று கூறினார். அப்போது குறிக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது, அதுமட்டுமல்லாது அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் என கூறினார். மேலும், அந்த ஆய்வுப் பணிகளில் ஏதாவது குறை இருந்தால் அதை சரி செய்து, ஆலையை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஏனெனில், புதிய ஆலைகள் வந்தால்தான், பொருளாதாரம் முன்னேற்றமடையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, ஆலையை மூடுவதை விட்டுவிட்டு, அந்த ஆலையில் இருக்கும் குறைபாடுகளை நீக்குவதற்கு உண்டான நல்ல வழிகளை கூறினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.