ஒரே தடத்தில் எதிரெதிரே 2 ரயில்கள் : அதிகாரிகள் 3 பேர் சஸ்பென்ட்
மதுரை -செங்கோட்டை பயணிகள் ரயில் மாலை 5:40மணிக்கு திருமங்கலம் வருவதற்கு பதிலாக 6:10மணிக்கு திருமங்கலம் ரயில்நிலையம் வந்தடைந்தது. பின்னர் ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டது.ரயில் திருமங்கலம் ரயில்நிலையம் அருகே உள்ள ரயில்வேகேட்டை கடந்துசென்றது.
இதனைத்தொடர்ந்து கேட்கீப்பர் அடுத்த ரயில்நிலையமான கள்ளிக்குடி ரயில்நிலையத்திற்கு தகவல்கொடுத்துள்ளார். ஆனால் கள்ளிக்குடி ரயில்நிலைய அதிகாரி செங்கோட்டை – மதுரை ரயில் கள்ளிக்குடியிலிருந்து புறப்பட்டுவிட்டதாக தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சியுற்ற கேட்கீப்பர் உடனடியாக திருமங்கலம் ரயில்நிலையத்திற்கு தகவல்கொடுத்தார்.
ரயில்பாதை ஒருவழிப்பாதை என்பதால் அதிர்ச்சியுற்ற அதிகாரிகள் உடனடியாக வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு ரயிலைநிறுத்துமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை – செங்கோட்டை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதே நேரம் செங்கோட்டை – மதுரை ரயிலுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அந்த ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்கள் நேருக்குநேர் மோதி பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை செங்கோட்டை ரயில் திருமங்கலம் ரயில்நிலைத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டை – மதுரை ரயில் திருமங்கலத்திற்கு வந்தபின் மதுரை புறப்பட்டு சென்றது. இந்நிலையில் மதுரை செங்கோட்டை – ரயில் புறப்பட்டு சென்றது அப்பொழுது திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரயில் மீண்டும் பாதிவழியில் நின்றது.
இந்த சிக்னல் கோளாறால் 1 மணிநேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதில் திருமங்கலம் இரயில்வே கேட்டும் திறக்கப்படாததால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.ஒருவழியாக சிக்னல்கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட்டுச்சென்றது. தொடர்ந்து மயிலாடுதுறையிலிருந்து – நெல்லை நோக்கிச்சென்ற ரயில் திருமங்கலம் வந்தடைந்து. இந்நிலையில் மீண்டும் சிக்னல்கொளாறு ஏற்பட்டதால் அந்த ரயிலும் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து 2மணிநேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ஆத்திரமுற்ற பயணிகள் ரயில்நிலைய அதிகாரியை முற்றுகையிட்டனர்.அதிகாரிகள் சமாதானம் செய்தும் பயணிகள் கூச்சலிட்டபடி இருந்தனர். சிலபயணிகள் ரயிலில் இருந்து இறங்கி பேருந்தில் செல்வதற்காக புறப்பட்டுச்சென்றனர்.இதனைத்தொடர்ந்து 7.15மணிக்கு வந்த பயணிகள் ரயில் 9.30மணிக்கு சிக்னல்கோளாறு சரிசெய்யப்பட்டு புறப்பட்டுச்சென்றது.அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில்கள் நேருக்குநேராக மோதவிருந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அலட்சியமாக செயல்பட்டதற்காக கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனா, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், திருமங்கலம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
–ராஜேந்திரன், -கள்ளிக்குடி