தமிழகம்

தேவர் ஜெயந்தி விழா.. விரட்டப்பட்ட உதயகுமார்..! பயத்தில் பழனிச்சாமி…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2010 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற போது தங்க கவசம் வழங்குமாறு தேவர் சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் தேவர் நினைவிடத்திற்கு தங்ககவசம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதிமுகவின் கட்சி நிதியோடு தனது சொந்தப் பணத்தையும் சேர்த்து தங்க கவசம் செய்து வழங்கினார். அந்த தங்க கவசத்தை பெற்றுக் கொள்வதற்கான பொருப்பாளராக அதிமுகவின் பொருளாளருக்கு அந்த உரிமையை ஜெயலலிதா வழங்கியிருந்தார். அன்றிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை அதிமுகவின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின் போது வங்கியிலிருந்து தங்க கவசத்தைப் பெற்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலைக்கு அணிவித்து வந்தார்.

2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டபோது இரு அணிகளும் பேச்சு வார்த்தை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தங்க கவசத்தை வழங்க முடிவு செய்து சம்மதித்தனர். அதன்பிறகு பன்னீர்செல்வம் அணியும், பழனிச்சாமி அணியும் இணைந்த பிறகு மீண்டும் கடந்த ஆண்டு வரை பன்னீர்செல்வமே தங்க கவசத்தைப் பெற்று பசும்பொன் நினைவிடத்திற்கு வழங்கி வந்தார். இந்த ஆண்டு தற்போது பழனிச்சாமி அணியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதால் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு இந்த ஆண்டு தங்க கவசத்தை பழனிச்சாமி அணியினரிடம் தான் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட வங்கிக்கு கடிதம் வழங்கினார். ஆனால் பன்னீர்செல்வம் சார்பிலும் வங்கிக்கு கடிதம் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு அணியினரும் பேச்சு வார்த்தை மூலம் சமாதானம் அடைந்தது போல் இந்த ஆண்டு நடக்கவில்லை. திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு பன்னீர்செல்வம் சார்பிலும் நீதிமன்றம் சென்றனர். பின்னர் இருதரப்புக்கும் வழங்காமல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பிரச்சனையில் இருஅணியினரும் நீயா.. நானா.. போட்டியை தவிர்த்து நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமாகி செல்வது தான் தேவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் அதிமுகவிற்கோ, பன்னீர்செல்வத்துக்கோ, பழனிச்சாமிக்கோ அழகல்ல. ஜெயலலிதா தங்க கவசத்தை வழங்கும் போது வங்கிக்கு அளித்த பத்திரத்தில் அதிமுகவின் பொருளாளர் என எழுதிக் கொடுத்தபோது பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது ஜெயலலிதாவின் விருப்பம் என்ன என்பது இன்று பழனிச்சாமி அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் நன்கு அறிந்தவர்கள் தான். ஆனாலும் வெற்று அரசியல் காரணங்களுக்காக பிடிவாதம் பிடித்து நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு அனைத்து கட்சியினரும் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆனால் பழனிச்சாமி அணியினர் வாக்கு வங்கி அரசியலுக்காக தங்க கவசம் விவகாரத்தில் பிடிவாதம் செய்து பிரச்சனை செய்கிறார்கள் என தேவர் சமூகத்தினர் கோபத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பழனிச்சாமி அணியைச் சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கோஷமிட்டதால் அந்த இடத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் உதயகுமாரை பார்த்து வந்தியா.. வணங்குனியா.. போய்கிட்டே இரு.. என ஏக வசனத்தில் பேசி விரட்டியுள்ளனர்.

பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய போது தென்மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் மக்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு 2021 தேர்தலிலும் அந்த எதிர்ப்பு பிரதிபலித்தது. அப்போதிருந்தே தென்மாவட்டத்தில் பழனிச்சாமி அணியினருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த ஆண்டு பசும்பொன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பழனிச்சாமி வரவில்லை என அறிவித்திருந்தார். பழனிச்சாமியின் அறிவிப்பு தேவரை புறக்கணிக்கிறார் என அப்பகுதியினர் கோபத்தில் இருக்கும் போது உதயகுமாரின் செயல் மேலும் கோபப்படுத்தியுள்ளது. அதனால் தான் உதயகுமார் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button