முறையான சிகிச்சை அளிக்கவில்லை-.. மனைவி இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல் !
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, மனைவி உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு கணவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டியைச் சேர்ந்த ஜெய்காந்த் (33) இவருக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த நித்யா (28) இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடம் கடந்த நிலையில் மூத்த ஆண் குழந்தைக்கு இரண்டு வயது முடிவடைந்த நிலையில். மீண்டும் கருத்தரித்த போது சிகிச்சைக்காக உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறார். அங்கு முறையான மருத்துவ வசதி இல்லாததால் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள (ரமணா) தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து நித்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்து நித்யாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறியதாக தெரிகிறது.
பின்னர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மனைவி நித்யாவிற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நித்யாவை சேர்த்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள் நித்யாவின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது என தெரிவித்து, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நித்யா உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாராபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொழுது ரத்தம் குறைவாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் ஊசி செலுத்திய பிறகுதான் நித்யாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என கணவர் குற்றம் சாட்டி தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்களுடன் மறியலில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். புகார் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு தெரிவித்து அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.