சாக்கடையாக மாறிப்போன நூற்றாண்டுகால கால்வாய்
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பாளர் களாலும் பொறுப்பற்ற சில மக்களாலும் பொலிவை இழந்து சாக்கடை கால்வாயாகவே மாறிப்போன பழமையான ஏவிஎம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவனந்தபுரத்தையும், கன்னியா குமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைக்கவும் கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும் மன்னர் உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மாவினால் 1860-ல் அமைக்கப்பட்டதுதான் “அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மா” கால்வாய் என்ற இந்த ஏவிஎம் கால்வாய். இந்த கால்வாய் வழியாக கேரளாவிற்கு தேங்காய், மீன், கயிறு, அரிசி, நெல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் படகு மூலம் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கும் குமரி மாவட்டம் மண்டைக்காட்டுக்கும் இடையே இந்த நீர்வழிப்போக்குவரத்து நடைபெற்றுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை குடிநீர் ஆதாரமாகவும் இருந்த இந்த ஏ.வி.எம். கால்வாய், அலட்சியமான சில அதிகாரிகளாலும் பொறுப்பற்ற சில மக்களாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
குடியிருப்புகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கப்படுகிறது. தேங்காய்ப்பட்டணம் பகுதியில் கால்வாய் இருந்த இடம் தெரியாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இறைச்சிக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டும் பகுதியாக மாறிப்போன கால்வாயால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொற்றுநோய் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கால்வாயை மீட்டெடுக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கால்வாயை சீரமைக்கக் கேட்டு பல்வேறு கட்டங்களில் போராட்டங்களையும் நடத்திப் பார்த்த மக்கள், ஒரு கட்டத்தில் சொந்த செலவில் களத்தில் இறங்கி தூர்வாரியுள்ளனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருளாதாரம் இடம் கொடுக்காத நிலையில், மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நூறாண்டுகளைக் கடந்த ஏவிஎம் கால்வாய் சீரமைக்கப்பட்டால் குமரிக்கும் கேரளாவுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, இந்தப் பகுதிகள் சுற்றுலாத் தலமாகவும் மாறும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கால்வாய் புனரமைப்புப் பணிக்காக ஆயிரத்து 670 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்து வருவதாகக் கூறினர். கால்வாயில் குப்பைகள் கொட்டினாலோ, கழிவுகள் கலந்தாலோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழமையும் பெருமையும் வாய்ந்த கால்வாயை மீட்டெடுக்கும் பொறுப்பு அரசிடம் இருந்தாலும் அதனை மேற்கொண்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்காமல், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொதுமக்களிடமே உள்ளது என்பதுதான் நிதர்சனம்.
& உதுமான்அலி