தமிழகம்

திருப்பூர் அருகே வங்கியில் களவு போன நகையும்.. தகர்ந்து போகும் திருமண கனவும்…

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி காலை வழக்கம் போல் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரிகள் சென்று பார்த்தபோது வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்டு களவு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர். சுமார் 31 லாக்கர்கள் உடைக்கப்பட்டு சுமார் 600 சவரன் வரை தங்க நகைகள் காணாமல் போனதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கிரமப்புற வங்கி கிளையில் களவு போன நகைகளை மீட்க அப்போதைய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அனில் சிங்(38) என்பவரை டில்லியில் கைது செய்தனர். அனில் சிங்கிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை நடந்த வங்கியில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்ததும், தனது நண்பர்களான கஜராஜ் (37) மற்றும் இஷார் (34) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 85 சவரன் நகை மற்றும் 12 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் கொள்ளை நடந்து சுமார் 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வங்கி கொள்ளையில் பாதிக்கப்பட்டு நகைகளை இழந்த விவசாயிகளுக்கு வழக்கு குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் யாரை தொடர்பு கொள்வது என விழி பிதுங்கி நிற்கின்றனர்..

இதற்கு ஒரு படி மேலாக இந்த களவினால நகைகளை பறிகொடுத்த விவசாயி வரதராஜன்(59) என்பவரது குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டப்பாளையம் அய்யந்தோட்டத்தில் தனது மனைவி பத்மாவதி(55) மற்றும் மகள் குணவதி(24) ஆகியோருடன் வசித்து வருகிறார். வரதராஜிற்கு போலியோ நோய் பாதிப்பு காரணமாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்கள் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 55 சவரன் உடன் தனது சகோதரி நகை என 70 சவரன் நகையை 1/26 என்கிற லாக்கரில் கள்ளிப்பாளையம் ஸ்டேட் வங்கியில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த நிலையில் அவரது நகையும் காணாமல் போனதால் இடிந்து போயுள்ளது மொத்த குடும்பமும். இந்நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை சார்பில் 13 சவரன் நகையை மட்டும் வரதராஜிடம் ஒப்படைத்துள்ளனர். அதுவும் கேட்கும் போதெல்லாம் காண்பிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்.

இதனிடையே திருமண வயதிலுள்ள தனது பட்டதாரி மகளுக்கு திருமணம் செய்து வைக்க சேர்த்து வைத்திருந்த நகையை பறிகொடுத்ததால் மகளின் திருமணம் தடைபட்டுள்ளதாக கண்ணீர் மல்க கூறுகின்றனர். மேலும் வீட்டில் வைத்து பாதுகாக்க முடியாததால் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்த நகையும் இழந்த நிலையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இழந்த நகைகளை மீட்டு தடைபட்டு நிற்கும் தங்களது பெண்ணின் திருமணம் நடைபெற உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button