மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட முடியவில்லை.
இதற்கிடையில் தர்ம யுத்தம் என்ற பெயரில் அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு காட்டினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கிவிட்டு ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்துக் கொண்டு சிறைக்கு சென்றார்.
இவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சசிகலாவின் தண்டனை காலம் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆனால் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் பரவின. அதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. சிறைத்துறை விதிகளின் படி, கைதி ஒருவர் தனது தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பகுதி காலத்தை எந்தவித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் சிறையில் கழித்து விட்டால் போதும்.
அவர் முன்கூட்டியே விடுதலையாக தகுதி உடையவர். அதன்படி சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையில் 2 ஆண்டுகள் 8 மாதம் சிறையில் இருந்தால் போதும்.
அதேசமயம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி, சிறையில் பாதி தண்டனை காலத்தை அனுபவித்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை அடிப்படையாக கொண்டு சசிகலா வெளியே வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை பெற்றவர்களுக்கு, இந்த சிறப்பு சலுகை பொருந்தாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதனால் சசிகலா வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக 141 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதில் சசிகலா பெயர் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், காந்தி பிறந்த நாளை ஒட்டி சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சசிகலாவை விடுதலை செய்ய முடியாது என்று கர்நாடக சிறைத்துறை டிஜிபி கூறியுள்ளார். சிறைத்துறை விதிகளின் படி, மூன்றில் இரண்டு பங்கு தண்டனை காலத்தை சசிகலா நிறைவு செய்துவிட்டார். இதைக் கொண்டு சட்ட ரீதியாக முயற்சிப்போம்.
முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், ஊழல் குற்றவாளியாக இருந்தாலும், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
அதனை மேற்கோள் காட்டி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து சசிகலாவை முன்கூட்டியே வெளியே கொண்டு வர முயற்சி செய்வோம். இதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
- சூரிகா