ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் ! வலை வீசிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர்
சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, அம்பத்தூர் ( CSCID ) பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வியாசர்பாடி பகுதியில் சோதனை மேற்கொண்டபோது,
அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது முறையான ரசீதுகளோ, அனுமதியோ இல்லாமல் அரிசி மூட்டைகள் அந்த ஆட்டோக்களில் இருந்துள்ளது.
தனிப்படை போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்களிடமிருந்து குறைந்த விலையில் அரசு வழங்கிய ரேஷன் அரிசியை வாங்கி, அவற்றை ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டைக்கு கொண்டு சென்று, தெரு ஓரம் இட்லி,தோசை கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து TN-05 K 7314 என்ற எண் கொண்ட ஆட்டோவில், 30 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகள் சுமார் 420 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ததோடு, ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் நாயுடு பேட்டையைச் சேர்ந்த நாராயணன் மனைவி சிலகம்மா, வியாசர்பாடி கணேசன் மகன் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் இரண்டாவதாக வந்த TN- 01 BS 5378 என்கிற எண் கொண்ட ஆட்டோவில் 30 கிலோ எடையில், 22 மூட்டைகள் சுமார் 660 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ததோடு, ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் நாயுடு பேட்டையைச் சேர்ந்த வெங்கடசாமி மனைவி மோகனம்மா, புதுப்பேட்டையைச் சேர்ந்த மாதவன் மகன் விஜய ரவீந்திரன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
-கே.எம்.எஸ்