அதிமுக கொடி கம்பம் சரிந்துவிழுந்து விபத்து : சுபஸ்ரீயை போல் மற்றுமொரு இளம்பெண் படுகாயம்!
சென்னையில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணத்திற்காக சாலையெங்கும் பேனர் வைக்கப்பட்டதால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்தார். பணி முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் காற்றில் பறந்து வந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் சாலையில் சரிந்து விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தினர்.
நீதிமன்றமும் தனது பங்கிற்கு கண்டனங்களை தெரிவித்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அரசியல் கட்சியின் கொடி கம்பம் சரிந்து விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கியதாக மற்றொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
கோல்டுவின்ஸ் பகுதி வழியே சென்ற போது அப்பகுதியில் இருந்த கட்சி கொடி ஒன்று திடீரென்று சரிந்து விழுந்தது. தன் மீது விழாமல் இருப்பதற்காக அனுராதா பிரேக் பிடித்தார். அதில் வாகனம் சறுக்கி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அனுராதா கால் மீது ஏறியதாக கூறப்படுகிறது.
உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள அதிமுக கட்சி பிரமுகரின் இல்ல திருமணம் கடந்த 10ஆம் தேதி நடந்தது.
இதையொட்டி சாலையில் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதுவே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்று இளம்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவத்தை போலீசார் மறைக்க முயற்சி செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர். சாலையில் சரிந்து விழுந்த கொடி கம்பம் அதிமுக கட்சியை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தங்களுக்கு புகார்கள் ஏதும் வரவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் ராயல் கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனுராதாவை சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், திமுக சார்பாக 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“இது சம்பந்தமாக லாரி ஓட்டுநர் மீதுதான் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்களே தவிர கொடி கட்டியவர்கள், விழா நடத்தியவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மீது எந்தவித வழக்கும் இதுவரை பதியப்படவில்லை. இந்த செய்தி வெளியில் வரக்கூடாது என்பதற்காக அரசு முயற்சி எடுத்திருக்கிறது. அதையும் மீறி இந்த செய்தி வெளிவந்திருக்கிறது. மறுநாள் ஊடகத்துறையினர் இந்த விபத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அந்தச் சம்பவம் குறித்து தனக்கு தெரியாது – செய்தி வரவில்லை என அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார்.
தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது தெரியாது என்று எப்படிச் சொன்னாரோ, அதேபோன்று இந்த சம்பவமும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறி இருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது. வேதனைப்பட வேண்டியதாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில், ஒரு காலை இழந்து இன்னும் குணம் அடையாமல் இருக்கும் அனுராதா என்ற பெண்ணை காப்பாற்ற தமிழக அரசு முழுமுயற்சி எடுக்க வேண்டும் என, மிகுந்த உருக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் எல்லாவித உதவிகளையும் அந்த குடும்பத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் அந்த குடும்பத்திற்கு துணை நிற்கும் என்ற உறுதியை, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறேன். சிகிச்சை முழுமையாக முடிவடைந்த பிறகு, செயற்கைக் கால் பொருத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், அதையும் திமுக பொறுப்பேற்றுக் கொண்டு செய்து தரும் என்ற உறுதியினையும் அவர்களுக்கு அளித்திருக்கிறோம்” என்றார்.
அரசியல் கட்சிகள் செய்யும் விளம்பரங்களால் இனியொரு அப்பாவி உயிர் மரணிக்கக் கூடாது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
- சாகுல்ஹமீது