பழுதடைந்த பள்ளி கட்டிடமும் – தரமற்ற சத்துணவு அரிசியும், கரைப்புதூரில் உள்ள பள்ளிக்கு என்னதான் ஆச்சு….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும்.இப்பள்ளி கடந்த 2005 ஆம் ஆண்டு 4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு 14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 17 ஆண்டுகளை கடந்து இப்பள்ளியில் தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புக்கள் நடைபெற்று வருக்கின்றன. இந்நிலையில் தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்டிடத்தின் முன்புறத்தில் கட்டிடங்கள் இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்லவேண்டியுள்ளது.
மேலும் சத்துணவு திட்டத்தில் மதியம் வழங்கவேண்டிய அரிசி தரமற்றதாக உள்ளதாக அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கொரானா தாக்கத்தின் போது தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை மேற்படி பள்ளியில் சேர்ந்த்துள்ளனர். மேலும் மதிய சத்துணவு திட்டத்தில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இருப்பில் இருக்கும் அரிசியை பயன்படுத்திவிட்டு பின்னர் புதிய அரிசியை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் சமையல் செய்ய ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இந்த சிலிண்டர் 10 நாட்களுக்கு மட்டுமே வருவதாகவும் தேவைப்படும் சிலிண்டரை தாங்கள் தான் ஏற்பாடு செய்துகொள்வதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும் மதிய உணவு உண்ணும் குழந்தைகளுக்கு மரத்தடியில் உணவு வழங்கப்படுவதோடு மண்தரையில் அமர்ந்து உண்ணும் அவல நிலையிலும் பள்ளி உள்ளது.
எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் போர்கால நடவடிக்கை எடுத்து எதிர்கால தூண்களாகிய மாணவர்களின் கல்விப்பயணத்திற்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.