கஞ்சா போதையில் தள்ளாடும் கல்லூரி மாணவ, மாணவிகள்…! தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா…?
தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் ஆபரேஷன் கஞ்சா என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை செய்து கஞ்சா வியாபாரிகள், விற்பனை செய்தவர்களை கைது செய்ததோடு, அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்த பலகோடி ரூபாயை முடக்கினர்.
ஆனாலும் சில சமூக விரோத கும்பல் மறைமுகமாக கஞ்சாவை விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் கூலித் தொழிலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் சில பெண்களும் போதைக்காக இதை பயன்படுத்தி பாதிக்கப்படுவது தான் வேதனையான விஷயம்.
டாஸ்மாக் அயல்நாட்டு மதுபான விற்பனைக்கு நிகராக கஞ்சாவும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சமூக விரோத கும்பலால் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இந்த வியாபாரிகள் ஆந்திராவிலிருந்து சில டிராவல்ஸ் பேருந்துகள், ரயில்கள், கார்கள் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு ஊரிலும் தங்களுக்கு நம்பத்தகுந்த முகவர்களை நியமித்து கஞ்சாவை விற்பனை செய்து வருகிறார்களாம்.
இதேபோல் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் வருஷநாடு, கம்பம் போன்ற பகுதியிலும் தமிழக கேரள எல்லைப் பகுதியான மூணாறு எஸ்டேட் பகுதிகளிலும் சில சமூக விரோத கும்பல்கள் கஞ்சா செடிகளை பயிர் செய்து அவற்றை பருவத்திற்கேற்ப அறுவடை செய்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகின்றனர்.
இது சம்பந்தமாக நமது நாற்காலி செய்தி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நமது செய்திக் குழுவினர் தேனி மாவட்டத்தில் வருஷநாடு, கம்பம், தேனி, மூணாறு எஸ்டேட் பகுதிகளில் ரகசியமாக கள ஆய்வு மற்றும் புலன்விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆந்திராவிலிருந்து கடத்தப்படும் கஞ்சாவை மேற்கூறிய வழித்தடங்களில் தேனிக்கு கொண்டு வருகிறார்களாம். இதேபோல் தேனி மாவட்டத்தில் வருஷநாடு, கம்பம், மூணாறு எஸ்டேட் போன்ற மலைப்பகுதிகளில் விளையும் கஞ்சாவையும் தேனிக்கு கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு தேனிக்கு கொண்டு வந்த கஞ்சாவை வெள்ளைப் பூண்டு, மிளகாய் வத்தல் மூட்டைகளில் ரகசியமாக வைத்து சரக்கு லாரிகள், ஜீப், கார்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறார்களாம். இந்த கஞ்சா கடத்தல் கும்பலுக்கு பக்கபலமாக சில மீடியா என்கிற முத்திரையுடன் உதவி வருவதால் கடத்தல் கும்பல் மீடியா முத்திரையுடன் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்து விடுகிறார்களாம். மேலும் மீடியா முத்திரையுடன் வெள்ளைப் பூண்டு, மிளகாய் வத்தல் மூட்டைகளில் கஞ்சாவை கடத்தும் சமூக விரோத செயலுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு மாதாமாதம் பெருந்தொகை கை மாறுகிறதாம்.
இவ்வாறு கஞ்சா கடத்தல் கும்பல் வழங்கிய பணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிள், மலைப்பகுதிகளில் கரடு முரடான பாதைகளில் செல்வதற்கு புதிய கார்களை வாங்கி அதன் மூலம் காவல்துறையினரின் நடவடிக்கைகளை கவனித்து ரகசியமாக கஞ்சா கடத்தல் கும்பலுக்கு தெரிவித்து வருகிறார்களாம். கஞ்சா கடத்தலுக்கு மீடியா முத்திரையுடன் உதவி வரும் நபரின் கைபேசி எண், வங்கி வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.
மேலும் தேனியிலிருந்து வெள்ளைப் பூண்டு, மிளகாய் வத்தல் மூட்டைகளில் ரகசியமாக கடத்தப்படும் கஞ்சா செம்பட்டி, ஒட்டன்சத்திரம் வழியாக கோவைக்கு விற்பனைக்கு வருகிறதாம். கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி சுதாகர் உத்தரவின் பேரில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்த சமூக விரோத கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதோடு, அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
அதேபோல் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து கோவை மாநகர பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதோடு கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் போதைப் பழக்கத்தை விட்டு விடுமாறு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த வாரம் திருப்பூர் சாமுண்டி புரம் காந்திநகரைச் சேர்ந்த கோபி அவரது நண்பர் சபி முகமது ஆகிய இருவரும் கோவை அவிநாசி சாலையில் உள்ள அறிவியல் மையம் அருகில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நான்கு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கோவை மாநகரில் உள்ள பிருந்தாவன் நகர் பூங்கா அருகில் சாலையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக காத்திருந்த திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், நேருஜி நகரைச் சேர்ந்த நரேந்திரன், சோழியம் பாளையத்தைச் சார்ந்த பவிஷ்நாத் ஆகியோரை கைதுசெய்து அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்ததாக தனிப்படையினர் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக கோவை மாநகர காவல்துறையினரிடம் கேட்டபோது…. கோவை மாநகரைப் பொருத்தவரை கஞ்சாவுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் ஆணையர் தனிப்படை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேனி மாவட்டத்திலிருந்து சில சமூக விரோத கும்பலால் கோவை மாநகருக்கு கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட சில கஞ்சா வியாபாரிகளிடம் இருந்த டைரியை கைப்பற்றிய போது சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து விசாரணை மேற்கொண்டபோது சிலர் மீடியா என்கிற பெயரில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு உதவி வருகிறார்கள் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. இந்த தகவலை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கஞ்சா கடத்தும் சமூக விரோத கும்பல், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் மீடியா பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றவர்கள், அவர்களின் பொருளாதார பின்னணி குறித்து விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அவர்களை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி சுதாகர், மதுரை தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் ஆகிய இருவரும் தேனி மாவட்டத்திலிருந்து பூண்டு, மிளகாய் மூட்டைகளில் ரகசியமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தும் சமூக விரோதிகள் மீதும், இவர்களுக்கு மீடியா பெயரைப் பயன்படுத்தி உறுதுணையாக இருந்து மாதாமாதம் மாமுல் வாங்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? காத்திருப்போம்…..
–இந்திரஜித்