பல்லடம் அருகே மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக பள்ளியில் கூட்டம் நடத்திய ஊராட்சி நிர்வாகம்
தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய தினங்களில் அந்தந்த கிராமங்களில் கிராம சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டு முதல் நகர சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைப்புதூர் ஊராட்சி சார்பில் கிராம சபா கூட்டம் காரைப்புதூரில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். தற்போது இந்த கிராம சபா கூட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இதனிடையே பள்ளி வேலை நாளான நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று வழக்கம்போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்து வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போது பள்ளி வளாகத்தில் மைக் வைத்து கிராம சபா கூட்டம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் கல்வித்துறயை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டதும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்தது ஏன்? எதனால் பள்ளி வேலை நேரத்தில் ஊராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் கூட்டம் நடத்தியது? பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது இது போன்று ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்தியது நியாயம் தானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே எதிர் காலத்தில் இது போன்று பள்ளி வேலை நாட்களில் கூட்டம் நடத்துவதை தவிர்த்தால் மாணவர்களின் கல்வி தடைபடாது என்பதே நிதர்சனமான உண்மை.