நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது ஜாமியா பல்கலைக்கழகத்தினர் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, பலர் காயமடைந்தனர். காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கடுமையாகத் தாக்கும் காட்சிகள், துப்பாக்கி எடுத்துச் சுடும் காட்சிகளெல்லாம் அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணைகள் ஒருபுறம் தனியாகச் சென்று கொண்டிருக்க, ஜாமியா பல்கலைக்கழகத்தில் மீண்டும் நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆதரவு பேரணியில் பங்கேற்றிருந்தபோது, “குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஏற்காதவர்கள் துரோகிகள், துரோகிகளைச் சுட்டுக் கொல்வோம்” என கூறியிருந்தார். இந்த சூழலில் ஒருவர் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
அதே வேளையில் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மனிதச் சங்கிலி அமைத்து எஸ்டிபிஐ மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து எஸ்டிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த போராட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள் “சுதந்திர இந்தியத் தேசம் அனைவருக்குமான. அனைவரையும் உள்ளடக்கிய, அடாவடித்தன்மையற்ற, அழிவைத் தராததே இந்தியத் தேசியம்”, என்றும் “அடையாளங்களைக் கடந்த அரவணைப்பே இந்தியத் தேசம்!” எனத் தேச தந்தை என்றிழைக்கப்படும் காந்தியின் கூற்றையும் சுட்டிக்காட்டிப் பேசினர்.
மேலும் மற்றொரு நிர்வாகி ஒருவர் பேசுகையில், “உலக வரலாற்றில் உண்மையும், அன்புமே எப்போதும் வென்றுள்ளன. வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும் கூட வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்” என பாஜகவிற்கு எச்சரிக்கை விடும் வகையிலும் பேசினார்.
இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.