நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது 3 பேருமே ஜாமீனில் உள்ளனர்.
ஆனால், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சுகந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவிகளிடம் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. நிர்மலாதேவி உயரதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசினார் என்று கூறும் சிபிசிஐடி போலீசார், அந்த உயரதிகாரிகள் யார் என்பதையும் குறிப்பிடவில்லை” என்று வாதிட்டார்.
இதற்கு அரசு தரப்பில் “வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருவதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை” என்று எடுத்துரைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜரானார். வழக்கின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்பும் நீதிமன்றத்தை விட்டு அவர் வெளியேற மறுப்பு தெரிவித்து அமர்ந்திருந்தார்.
அருள்வாக்கு சொல்வதுபோல முணுமுணுத்த அவர், தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து தான் விடுதலையாகி விட்டதாகவும், தனக்கு எதிராக குற்றஞ்சாட்டிய மாணவிகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும் கூறி அதிர வைத்தார். தனது முடிகளை தானே வெட்டி அதனை தனது காதில் செருகிக்கொண்டும் அவர் அமர்ந்திருந்தார். இதனால்,நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி மனநலம் பாதிக்கப்பட்டவர்போல நடந்துகொண்டார். பின்னர் அருப்புக்கோட்டையில் உள்ள தர்காவிலும் அதேபோல நடந்துகொண்டார். பின்னர் காவல்துறையினர் அவரை வீட்டில் கொண்டுபோய் சேர்த்தனர்.
இந்த நிலையில், தனக்குத் தெரிந்த ஒருவரிடம் அவர் பேசியது போன்று ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சார், நேற்று ஏதாவது கோபமாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. ஆன்மிக ரீதியாக இப்படி நடக்கிறதா எனத் தெரியவில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது.
2 நாளுக்கு முன் தஞ்சாவூரில் தெரிந்தவர் வீட்டுக்குச் சென்று மனநல மருத்துவரைப் பார்த்தேன். இப்போது தினம் ஒரு கூத்து நடக்கிறது. மதுரையில் உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். தினம் பெரிய பிரச்னை வருகிறது. இப்போதுகூட நான் தயாராக உள்ளேன்’’ என பேசுகிறார்.
எதிர்முனையில் பேசிய அந்த நபர், `திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு உங்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தோம். என் மனைவி கடும் மன அழுத்தத்தில் இருந்தார். அங்கேதான் என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தேன். இப்போது நன்றாக உள்ளார். நீங்கள் என்னை பேசவே விடாததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது மீண்டும் பேசிவிட்டு அழைக்கிறேன்’ என்கிறார்.அதற்குப் பதிலளிக்கும் நிர்மலாதேவி,
உடனே பேசிவிட்டு மதுரையோ அல்லது திருநெல்வேலிக்கோ என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’’ எனக் கூறி முடிக்கிறார். இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில நாள்களாவே நிர்மலாதேவி தனக்கு சாமி வந்ததாகவும், வாக்கு கொடுத்ததாகவும், தனக்கு எதிரானவர்கள் இறந்துவிட்டதாகவும் ஏதேதோ பேசியும், செய்தும் வருகிறார்.