தமிழகத்தில் வறண்டு வரும் அணைகள் : குடிநீர் பற்றாக்குறை அபாயம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பெய்த மழைப்பொழிவானது இயல்பைவிட 14% குறைவு. அதிகபட்சமாக வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் இயல்பைவிட 24 சதவிகிதம் மழைப் பொழிவு குறைந்திருந்தது.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளன. இதில் மேட்டூர், பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பவானிசாகர், முல்லைப் பெரியாறு, ஆழியாறு சாத்தனூர், திருமூர்த்தி உள்ளிட்ட 15 முக்கியமான பெரிய அணைகள் உள்ளன.
இந்த அணைகள்தான் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 198 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த 15 அணைகளில் தற்போது 53 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
குறிப்பாக 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 28 டிஎம்சியும், 32 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 9 டி.எம்.சியும், 10 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறில் 1.4டிஎம்சியும், 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 1.2 டிஎம்சியும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 2.3 டிஎம்சியும், 13 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில் 6.5 டிஎம்சியும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 0.6 டி எம் சி நீர் மட்டுமே உள்ளது.
இந்த நீரைக் கொண்டு ஏப்ரல் மூன்றாவது வாரம் வரை மட்டுமே குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சாத்தனூர், ஆழியாறு, அமராவதி, பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த அணைகளில் இருந்து 15 முதல் 25 நாட்கள் வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இதனால் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி , திருவண்ணாமலை, திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.இந்த மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் 4,337 பஞ்சாயத்திற்குட்பட்ட 20,212 வாழிடங்களில் குடிநீர் பஞ்சம் உண்டாகும் எனவும், மே மாதம் 5,426 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 25,993 வாழிடங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், விழுப்புரம், திருவண்ணமலை உள்ளிட்ட 24 மாவட்டங்களும், இதர 7 மாவட்டங்களைச் சேர்ந்த 38 வட்டாரங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
நிலைமையை சமாளிக்க தமிழக பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் அணையின் தற்போதைய நீர்மட்டம் குறைந்து வருவதால் அதற்கு ஏற்பதான் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
அணைகளில் வரும் நீரை மட்டுமே நம்பி அடுத்து வரும் மாதங்களில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது எனவே மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதமே குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசின் சார்பில் 158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு சென்னையைப் பொறுத்தவரையில் கல்குவாரிகள், பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கல்குவாரிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மற்ற இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இப்பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி இப்பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் மே இறுதி வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் சமாளிக்க முடியும்.
இந்நிலையில் சென்னையில் மெட்ரோ தண்ணீர் வேண்டி மார்ச் மாத தொடக்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு, இப்போதுதான் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ தண்ணீர் வீட்டுக்கு வருவதற்கு 20 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக நகரவாசிகள் கூறியுள்ளனர்.
இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நிலத்தடி நீர் மிகவும் குறைந்துள்ளது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், திநகர், ராயபேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சென்ற வருடம் 150 முதல் 200 அடியில் இருந்த நிலத்தடி நீர், இந்த வருடம் 400 அடிக்கு சென்றுள்ளது. சென்னையின் தெற்கு புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் 700 அடிக்கு சென்றுள்ளது.
எனவே சென்னைவாசிகள் தண்ணீர் வழங்கும் தனியார் ஒப்பந்ததாரர்கள் அல்லது மெட்ரோ தண்ணீரை நம்பி வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுள்ளனர். தனியார் தண்ணீர் லாரிகள் 9,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கின்றனர். ஆனால் மெட்ரோ தண்ணீர் ரூ.700 மட்டும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ தண்ணீரைதான் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு தற்போதுதான் மெட்ரோ தண்ணீர் வழங்கப்படுள்ளது. மேற்கு மாம்பலம், திநகர், நுங்கம்பாக்கம், அசோக் பில்லர், கே கே நகர் போன்ற இடங்களில் வசித்து வருபவர்களுக்கு மெட்ரோ தண்ணீர் பெற 20 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் தண்ணீர் லாரிகளின் அமைப்பின் தலைவர் என் நிஜலிங்கம் கூறுகையில் ‘4,500 தனியார் லாரிகள் சென்னை முழுவதும் இயங்கிறது. 12,000 லிட்டர் முதல் 36,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட லாரிகள் இயங்கி வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் முதல் அடிக்குமாடி குடியிருப்பு வரை அனைவரும் தனியார் தண்ணீர் லாரிகளைத்தான் நம்பி உள்ளனர்’’ என்று கூறினார்.