தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் குப்பைகளை காலை நேரத்தில் தீ வைப்பதால் அதிக புகை மூட்டம் உருவாகி, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் திணறி வருகின்றனர். புகை அதிகமாக காற்றில் பரவுவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என அனைவருக்கும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட ஊராட்சியே வழிவகுத்து வருகிறது.

சாலை ஓரங்களில் தேங்கியிருக்கும் குப்பைகளில் ஈ, கொசு மற்றும் எலிகள் தங்குவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று அபாயம் அதிகரித்து வருகிறது. மேலும், குப்பைகளில் உள்ள திடக்கழிவுகள், வாகன உதிரிபாகங்கள், கண்ணாடி துகள்கள் போன்றவை சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்க வழிவகுத்து வருகிறது.

தாராபுரம், உடுமலை செல்லும் சாலையில் பல இடங்களில் இதேபோல் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது சம்பந்தமாக தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஊராட்சி இயக்குனர், மாவட்ட ஆட்சியர், துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.