24 மணிநேரமும் மது விற்பனை ! சாதனை புரிந்த திருப்பூர் மதுவிலக்கு போலீஸார் !

திருப்பூர் மாவட்டம் கணியூர் பகுதிகளில் அதாவது காரத்தொழுவு முதல் மடத்துக்குளம் வரை செல்லும் சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கணியூர் அடுத்துள்ள ஆஸ்பத்திரி மேடு பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்காக இந்த வழியாக பயணிக்கின்றனர்.

கணியூர் வஞ்சி புரம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடை ( எண் : 2026 ) பாரில் 24 மணிநேரமும் தங்குதடையின்றி மது விற்பனை செய்யப்பட்டு வருவதால், அதிகாலை நேரத்தில் மதுபிரியர்கள் குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பதால் இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் செயல்படும் மதுபான பார் அருகே காவல் நிலையமும் உள்ளது. இருந்தபோதிலும், காவல்துறையினர் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் இரவு பகல் பாராது மது விற்பனை செய்பவர்கள் மீது மதுவிலக்கு போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக விசாரித்தபோது.. ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் செல்வாக்கில் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் ஏழு டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தடுக்க வேண்டிய மதுவிலக்கு காவல்துறையினர் மாதம் ஒரு முறை டாஸ்மாக் பார் நடத்தும் உரிமையாளர்களிடம் ஒரு பெருந்தொகையை பெற்றுக் கொண்டு, இது போன்ற கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்காமல், ஊக்கமளித்து வருகின்றனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வரும் பார்களுக்கு அங்கீகாரம் வழங்கிய மதுவிலக்கு துறையினர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுவிலக்கு துறை உதவி ஆய்வாளர் லோகு என்பவர் இதுபோன்ற செயலுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு மதுவிலக்கு துறையினர் துணை போகிறார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்பகுதிகளில்., கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி, மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், கண்டுகொள்ளாமல், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மது விற்பனையை ஊக்குவிக்கும் மதுவிலக்கு போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




