அமராவதி வனச்சரகத்தில் இறந்த நிலையில் ஆண் புலியின் உடல் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சராக பகுதியில் வன காவலர்கள் ரோந்து சென்ற பொழுது கழுதை கட்டி ஓடை பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு . புலியின் உடல் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன்,தலைமையில், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, உதவி இயக்குனர் கணேஷ் ராம் ஆகியோரது முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், ராஜன்,ராஜா சொக்கப்பன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினரால், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இறந்த ஆண் புலிக்கு சுமார் 9 வயது இருக்கும் என மருத்துவ குழுவினரால் உறுதி செய்யப்பட்டது. புலியின் இறப்பானது முள்ளம் பன்றியை வேட்டையாடும் பொழுது முள்ளம் பன்றியின் முட்களால் அதன் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு உள்பகுதியில் சீல் பிடித்த நிலையில் வேட்டையாட முடியாத சூழ்நிலையில் அதன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவக் குழுவினரால் உறுதி செய்யப்பட்டது. மேலும் முள்ளம் பன்றியின் முட்கள் புலியின் கால் மற்றும் இரைப்பை பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் புலியின் சடலம், பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவை வனப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது. கோவை மண்டலத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 11 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்கள் மட்டுமல்லாது வனத்துறை அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.