மதுவிலக்கு போலீசார் துணையோடு.. கள்ளச்சந்தையில் கன ஜோராக நடைபெறும் மது விற்பனை !

தொழில்துறையில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ திருப்பூர் மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் பல வகையில் முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருப்பூர் மாநகரம் முழுவதும் நடந்து வரும் கள்ளச்சந்தை மதுபான விற்பனை தொடர்பாக செய்திகள் வெளியிட்டும் அதற்கான நடவடிக்கையை மதுவிலக்கு போலீஸார் எடுக்க அந்த செய்தி குறிப்பில் பதிவு செய்திருந்தது. ஆனாலும் மதுவிலக்கு போலீஸார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமாக விசாரித்தபோது, மடத்துக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏழு மதுபான கடை பார்கள் இயங்கி வருகின்றன. அந்த ஏழு பார்களிலும் தடையின்றி மது விற்பனை செய்து வருவது இன்றளவிலும் குறையவில்லை. எந்த கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்சியை நடத்துவதற்கு இதுபோன்ற கள்ளச்சந்தை மது விற்பனை தான் கைகொடுக்கிறது. காலை நேரத்தில் சாலையில் மது குடித்துவிட்டு அபாயகரமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஒன்றும் அறியாத பள்ளி குழந்தைகள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் பெண்கள் உள்பட பலர் இதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் பார் உரிமையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஆளும் கட்சியின் அந்தந்த பகுதியின் நிர்வாகிகளுக்கு கணிசமான தொகையை கட்டாயம் தர வேண்டியுள்ளது. அதற்கான தொகையை வசூல் செய்வதற்கென அந்தந்த பகுதிகளில் அதற்காக சிலரை நியமித்து அந்த தொகையை வசூல் செய்து வருகின்றனர். ‘மக்கள் நலனே எங்கள் நலன்’ எனச்சொல்லும் அரசியல்வாதிகள் வேறுசிலரை வைத்து சாராய விற்பனையில் கள்ளாகட்டி வருவதை யாராலும் இன்றளவில் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸாரும், மதுவிலக்கு போலீஸாரும் இந்த விசயத்தில் அலட்சியம் காட்டுவது ஏனோ ? மதுவிலக்கு போலீசாருக்கு, பார் உரிமையாளர்கள் அவ்வப்போது வழக்கு பதிவு செய்வதற்கு என சிலரை ஆஜராக செய்து தங்கள் கணக்கை நீதிமன்றத்தில் சரிசெய்து விடுகின்றனர். இப்படி ஒரு அட்ஜஸ்ட் மென்ட் இருக்கும் வரை கள்ளச்சந்தை மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல.

தடையில்லா போதை பொருட்கள் விற்பனைக்கு காவல்துறை மட்டும் பாலியாக்குவது ஆரோக்கியமாக இருக்காது. இதற்கு முழு காரணம் அரசியல்வாதிகள் என்பதை அனைவரும் உணர வேண்டும். மதுபான கடைகளால் அரசு செயல்படுவது போல, கள்ளச்சந்தை மதுவிற்பனையில் தான் ஆளும் அரசியல் கட்சிகள் செயல்படுகிறதா ? என்கிற கேள்வியும் எழுகிறது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கள்ளச்சந்தை மது விற்பனையை தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ? என்பதே அப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.




