துணை வட்டாட்சியரின் வசூல் வேட்டைக்கு, துணை போகிறாரா அமைச்சரின் உதவியாளர் ?!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் தாலுகா அலுவலகத்தில் தான் வைத்தது தான் சட்டம் என்கிற வகையில் செயல்பட்டு வருவதாக இங்கு வருகைதரும் பொதுமக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நம்மிடம் கூறுகையில்.. கோவில்பட்டி தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயத்தை நம்பியே மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகத்திற்கு பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை போன்ற காரணங்களுக்காக வருகைதரும் பொதுமக்களிடம், பணம் கொடுத்தால் மட்டுமே வேலையை முடித்துக் கொடுப்பாராம் இந்த பாலசுப்பிரமணியன். பணம் கொடுக்க மறுத்தால் ஏதாவது காரணங்களைக் கூறி அலைக்களிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளாராம்.
தாலுகா அலுவலகத்திற்கு வருகைதரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டிய துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அடாவடித்தனமாக கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்களும் கொடுத்து வருகிறார்களாம் அப்பகுதியினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்மீது கொடுக்கப்படும் புகார்களை, இவரது உறவினர் அமைச்சர் கீதா ஜீவனின் உதவியாளராக இருப்பதால் அந்தப் புகார்களில் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என அமைச்சர் அலுவலகத்திலிருந்தே அளுத்தம் தரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாச்சியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் மீது மாவட்ட ஆட்சியரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து மாவட்ட ஆட்சியரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா ? காத்திருப்போம்…..