அரசியல்தமிழகம்

தமிழகத்தில் ஆட்சி கவிழும் என நினைத்தவர்களின் கனவு பலிக்கவில்லை

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அமைச்சர்களுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக சைக்கிள் பேரணியை மாவட்டம்தோறும் நடத்திவருகிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ஏற்கனவே மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இவர் நடத்திய சைக்கிள் பேரணியால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அமைச்சர்களின் ஆதரவாளர்களே உதயகுமாரை பாராட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு கட்ட சைக்கிள் பேரணியின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் திருவண்ணாமலையில் 3ம் கட்ட சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து அன்று மாலை பொதுக்கூட்டம் நடத்தி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது :- மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்கட்சியினர் கனவு கண்டனர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து, நம்மையும் சேர்த்து வழி நடத்துகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும், 1250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்துக்கொள்கின்றனர். இந்த பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ.தொலைவிற்கு சைக்கிள் பேரணி சென்று, வருகின்ற 28ந் தேதி ஆரணியில் நிறைவு நிகழ்ச்சி நடக்கின்றது” என்றார்.
தற்போதைய நிலையில் தமிழக அமைச்சர்களில் யாரும் செய்யாத புதிய முயற்சியாக சைக்கிள் பேரணியை ஆரம்பித்து தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக கட்சிக்காரர்களையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசின் சாதனைகளை எடுத்து செல்வதால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் இவரை பாராட்டுகின்றனர்.
இவரைப்போல மற்ற அமைச்சர்களும் கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தினால் தினகரன் பக்கம் சென்ற கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மீண்டும் அஇஅதிமுக பக்கம் இழுத்து வரலாம் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.

ஹாஜி அ.மு.முஸ்தாக் அகமத்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button