ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் 13 பேருக்கு சிகிச்சை…
திருப்பூர் மாவட்டம் திருமுருகண் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பமாக செயல்பட்டுவரும் சேவாலயத்தில் 20 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர். மேலும் சேவாலயத்தின் அறங்காவலர் செந்தில்நாதன் மற்றும் மேற்பார்வையாளர் ஜோதிலட்சுமி வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு காப்பாளராக தேவா என்பவர் மாணவர்களை கவனித்து வந்துள்ளார்.
மேலும் இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் பெரும்பாலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் மட்டும் சேவாலயத்தில் தங்கியுள்ளனர். இதனிடையே வழக்கம் போல் குழந்தைகள் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்க சென்றுவிட்ட நிலையில் அதிகாலை அங்கிருந்த மாணவர்கள் வயிற்றுவலியால் துடித்துள்ளனர். இதனை கண்ட காப்பாளர் தேவா உடனடியாக அக்கம்பக்கதினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் அரசு மருத்துவமனையிலும்.இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே திருப்பூர் அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், சேவாலயத்தில் தங்கியிருந்த 3 மாணவர்கள் இறந்தது சம்பந்தமாக மருத்துவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். திருப்பூரில் சேவாலயத்தில் தங்கியிருந்த மாணவர்கள் 3 பேரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.