அரசுப்பள்ளி ஆசிரியரின் சொத்து மதிப்பு 300 கோடி ?.! கல்வித்துறையில் கந்துவட்டி கொடுமை !
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பே கல்வித்துறை தான். டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் இன்று வரை ஆசிரியர்களுக்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது. ஆனால் தற்போது நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம் கல்வித்துறையையே கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த பெண் ஆசிரியை பிரபா மீது நடந்திருக்கும் கந்துவட்டித்தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபா கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ஆசிரியை பிரபா குழந்தைகளுடன் கோபியை அடுத்த நாகர்பாளையத்தில் வசித்துவருகிறார். இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு புதிதாக வீடு கட்டியபோது பணம் பற்றாக்குறை ஏற்படவே, ஈரோடு பெரியார் நகர் அரசு துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராமசாமியிடம் ரூ.15 லட்சம் கந்துவட்டிக்கு கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு மாத வட்டியாக ரூ.60 ஆயிரம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாத வட்டித்தொகையை பள்ளிக்கு சென்று மாத முதல்நாளே ஆள் வைத்து வசூலித்து விடுவார்.
இந்நிலையில் கடன் தொகையை செலுத்திய நிலையில் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் முத்துராமசாமி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து ஆசிரியை பிரபா தனது பாத்திரத்தை மீட்டுத்தரக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதனிடையே மாதச்சீட்டு நடத்தி தங்களை ஏமாற்றியதாக பிரபா மீது 10 பேர் புகார் அளித்ததை அடுத்து கோபி காவல்துறையினர் பிரபா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி முத்துராமசாமி அடியாட்களுடன் ஆசிரியை பிராவின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை லாரியில் ஏற்றி செல்ல முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த பிரபாவின் மகளை தாக்கியுள்ளனர்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கோபி காவல்துறையினர், அங்கிருந்தவர்களை அப்புறபடுத்தியதோடு லாரிகளை கைப்பற்றினர். பின்னர் பிரபா அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியை பிரபாவதி கூறும் போது, வீடு கட்ட வாங்கிய 15 லட்சத்திற்கு இது வரை ரூ.60 லட்சம் வரை செலுத்தியதாகவும், தன்னைப்போல நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடம் இருந்து ரூ.300 கோடி வரை சொத்தை அபகரித்ததாகவும் கூறினார். தனது வீட்டு பத்திரத்தை மீட்டு தரக்கோரி புகார் அளித்த தன் மீது பொய் புகார் அளித்து சிறைக்கு அனுப்பியதோடு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். ஆண்டு தோறும் அரசு ஊழியர்களின் சொத்துக்கணக்கு குறித்து தகவல் கேட்கும் அரசு, முத்துராமசாமியின் சொத்து குவிப்பு குறித்து இதுவரை விசாரணை மேற்கொள்ளாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. கல்வித்துறை மேம்பாட்டிற்காக அரசு
ஆயிரம் ஆயிரம் கோடிகளை செலவழித்து வரும் நிலையில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் 300 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.