2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அருளானந்தம், பாபு, ஹேரேன் பால் ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் கைது செய்தது. கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 பேர் சிக்கி இருக்கும் நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹேரேன் பால் ஆகிய 3 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்படவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள்.
“அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின.
இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதைத் தொடக்கத்திலிருந்தே திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், மகளிர் அமைப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வந்தனர். அவர்களைக் கைது செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது அதிமுக அரசு.
இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, திருநாவுக்கரசு என்பவரைக் கைது செய்து, அவரை மட்டும் பலிகடாவாக்கி, ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை.
அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களின் குடும்பத்தினருடன் தொடர்புடைய, ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ள ‘பார்‘ நாகராஜன் போன்ற அதிமுக நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை காட்டிய அக்கறையும், அரசுத் தரப்பில் எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக ஜாமீன் கிடைக்கச் செய்ததும், வெளியே வந்த பார் நாகராஜனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தித்ததும், அவரது அலுவலக வளாகத்திலேயே நின்று ஆளுங்கட்சி நிர்வாகியான நாகராஜன் பேட்டி அளித்ததும், எடப்பாடியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே அப்பட்டமாகக் காட்டியது. முழுக்க முழுக்க அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன், அதிமுகவில் தொடர்புடையவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பாலியல் கொடூரத்தை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டித் திசை திருப்பவும், செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர், நிருபர்களையே குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தி அதிமுக அரசும் அதன் ஏவல்துறையான காவல்துறையும் செயல்பட்டதை திமுக தொடர்ந்து எதிர்த்து, வலுவான குரல் கொடுத்தும், போராடியும் வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாதது கவலை அளித்தது. தாய்மார்களும், பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தாரும் பாதுகாப்பில்லாத சூழலை நினைத்து அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதோ பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு என நினைத்த நிலையில், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை சிபிஐ கைது செய்திருக்கும் தகவல் வெளியான.
இளம்பெண்களை நம்ப வைத்து, அதன்பிறகு ஏமாற்றி, பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்து, சீரழித்த கொடூரன்களில் மூவர் சிக்கியிருக்கிறார்கள். இதில் பாபுவும், ஹெரோன் பாலும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள். குற்றப்பின்னணியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவர்கள். தொடர்ச்சியான புலன் விசாரணையின் அடிப்படையில், மூன்றாவதாகக் கைதாகியுள்ள அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர். அதிமுகவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர். தோண்டத்தோண்ட இன்னும் நிறையத் தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும்.
சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன். பொல்லாத அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
சிபிஐ விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அதிமுகவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்’’ என ஸ்டாலின் தனது அறிக்கையின் மூலம் சிபிஐ அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதான் நடந்து வருகிறது. அதில் ஆறு ஆண்டுகளாக இந்த பாலியல் கொடூரம் நடந்ததாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆளும் கட்சியினர் சம்பந்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லாமல் உயிருக்கு பயந்து இருந்துள்ளனர். புகார் கொடுத்தும் தமிழக போலீசார் விஷயத்தை மூடிமறைக்கவே முயன்றிருக்கிறார்கள். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் இருப்பதால் இன்னும் யார்யார் சிக்கப் போகிறார்கள் என ஆளும் கட்சியினரே அச்சத்தில் இருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் ஒருவர் கூட தண்டனையில் இருந்து தப்பிக்கக்கூடாது என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
– முத்துபாபு