பல்லடத்தில் அரசு நிலம் விற்பனை…துணை போகிறதா ?..பதிவுத்துறை…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது மாணிக்காபுரம் ஊராட்சி. பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணா நகருக்கு அருகில் உள்ள மகா விக்ஷ்ணு நகர். கடந்த 1993 ஆம் ஆண்டு நகர ஊராமைப்பு இயக்குநரால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நகராகும். இந்நிலையில் தற்போது அப்பகுதி வளர்ச்சி அடைந்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாவிக்ஷ்ணு நகர் அமைந்துள்ள 8.17 ஏக்கர் நிலத்தில் பொது பயன்பாட்டிற்காக மாணிக்காபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த 40 ஆயிரத்து 390 சதுரடி நிலம் தற்போது தனியார் பெயரில் பல்லடம் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்ட இந்நகரில் உள்ள பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் தனியார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை அடுத்து , நாகூர் மீரான் என்பவர் வருவாய் துறைக்கு புகார் மனு அளித்துள்ளார். இதனை அடுத்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்லடம் பத்திர பதிவு துறையில் ஊராட்சிக்கு பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்த நிலத்தை எவ்வாறு பத்திர பதிவு செய்தார்கள் என்பது கேள்விகுறியாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் ஏன் இத்தனை ஆண்டுகள் கண்காணிக்காமல் விட்டது? இந்த கேள்விக்கெள்ளாம் ஒரே பதில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்பது தான். பழைய விலைக்கு இரும்பைத்தான் விற்பனை செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம் பல்லடத்தில் பழைய விலைக்கு அரசு நிலத்தை முறைகேடாக விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுகிறார்களா ? என்பதை வருவாய் துறைதான் தெளிவு படுத்த வேண்டும்.
நமது நிருபர் .