குடியிருப்பு பகுதியில் மின் மயானம்… மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம்,திருமுருகன் நகத், ஜெயஸ்ரீ நகர், தத்துவஞானிநகர், காமாட்சிநகர், பெத்தேல் சிட்டி,பாப்பநாயக்கனூர் மற்றும் நல்லகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாவிபாளையத்தில் இருந்து பாப்பநாயக்கனூர் செல்லும் பாதையில் மயானம் அமைந்துள்ள சுமார் 60 செண்ட் இடத்தை அதிகாரிகள் மின்மயானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்மயானம் அமைவதற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். பின்னர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை முற்றுகையிட்டு குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இதனிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது தாங்கள் குடியிருந்து வரும் வாவிபாளையம், காமாட்சி நகர் பெத்தேல் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள், வீட்டுமனைகள் உள்ளதாகவும், குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் ஏற்கனவே மின்மயானம் உள்ளதாகவும், தற்போதுள்ள மயான இடத்தில் போதிய உட்கட்டமைப்பை ஏற்படுத்தி மின்மயானம் அமைக்க முடியாத இடமாக உள்ளதாகவும், மேற்படி மயான இடத்தில் மின்மயானம் அமைக்கப்பட்டால் நல்லடக்கம் செய்ய முடியாமல் போகும் என தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களாகிய தங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் கருத்து கேட்காமலே முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தனர்.குடியிருப்புக்கு மத்தியில் மின்மயானம் அமைப்பதை விடுத்து மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தார்சாலை அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.