திமுகவில் வந்தவர்களின் ஆட்டம்… : தொண்டர்கள் காட்டம்..!
திமுக வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது என்று உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிடாத தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், “எ.வ.வேலு – சேகர்பாபு ஆகியோர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள். தங்களது சித்து வேலைகளால் தலைவர் ஸ்டாலின் இதயத்தில் இடம் பெற்று விட்டனர். இவர்களை கடந்து யாரும் தளபதியை சந்தித்து பேசிவிட முடியாது. இதில் எ.வ.வேலு ஒரு படி மேலே போய்விட்டார். காலையிலிருந்து இரவு வரை வேலு தலைவர் உடனேயே இருப்பார். அமைப்பு செயலாளர்கள் கூட வேலு அனுமதியில்லாமல் தலைவரை சந்தித்து விட முடியாது. அந்த அளவுக்கு பசைபோல் தலைவரிடம் ஒட்டிக்கொண்டு விட்டார்.
இவர் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர். ஆனால் திருவண்ணாமலையில் இருப்பதே இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் வேலுவின் தலையீடு உள்ளது. திருச்சி – தஞ்சை மாவட்டங்களில் இவர் சொல்வதுதான் சட்டம். அண்ணா அறிவாலயத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் எ.வ.வேலுவின் ஊழியர்கள். செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் முன்கூட்டியே வேலுவுக்கு சென்று விடுகிறது. தலைவர் குடும்பத்திலேயும் இவரது தலையீடு உள்ளது. தலைவரை சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் இவர்தான் முதலில் சந்திப்பார். பிறகுதான் தலைவரை சந்திக்க முடியும்.
ஒருமுறை இவரை கேட்காமல் மதுரை மாவட்ட கட்சிக்காரர் ஒருவரை துறைமுகம் காஜா தலைவரிடம் அனுப்பிவிட்டார். வேலு காஜாவை திட்டித் தீர்த்துவிட்டார். அறிவாலய ஊழியர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும் வேலுதான் தலைவருக்கு ஆல் இன் ஆல் அவரின்றி இங்கு ஒரு அணுவும் அசையாது என்கிறார்கள்.
இது சரியா, தகுமா என்பதை தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
சேகர்பாபு கதை தனி. இவர் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர். ஆனால் இவரது அலப்பரை சென்னை முழுக்க பரவி விட்டது. மாசு, ஜெ.அன்பழகன் ஆகியோர் மா.செ.க்களாக உள்ளனர். இவர்கள் இருவருமே சேகர்பாபுவுக்கு அடக்கம். திமுக ஆட்சிக்கு வந்தால் நான் அமைச்சர் என்று இப்போதே சொல்லி கொண்டிருக்கிறார்.
கலைஞர் நினைவிடத்தில் சேகர்பாபு நியமித்த ஆட்கள் பாதுகாப்புக்கு உள்ளனர். கலைஞர் நினைவிடத்துக்கு வருபவர்களை பிடித்து தள்ளவிடுவது இவர்கள் வேலை. சேகர்பாபுவை விஞ்சி சென்னை மாவட்ட திமுகவில் எதுவுமே நடப்பதில்லை. என்று குமுறுகிறார் தலைமைக் கழக ஊழியர்.
காலம் முழுவதும் திமுகவுக்கு உழைத்தவர்கள், பணம், காசு, செலவு செய்தவர்கள் இன்று கட்சித் தலைமைக்கு தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது உடன் இருந்தவர்கள், சிறைக்கு சென்றவர்கள், போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டிய நிலையில் உள்ளனர்.
கலைஞர் தலைவராக இருந்தபோது, பழைய கட்சிக்காரர்களை நினைவில் வைத்திருப்பார். நேரில் பார்த்து விட்டால் பெயர் சொல்லி அழைத்துப் பேசுவார். நலம் விசாரிப்பார். இன்று அத்தகைய அணுகுமுறையை பார்க்க முடியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றி ஒரு இரும்புத்திரை உள்ளது. இதனைக் கடந்து யாரும் ஸ்டாலினை சந்தித்து தமது குறைகளை கூற முடிவதில்லை.
மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை அரவணைப்பதில் தவறில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களை மட்டும் நம்பி திமுக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. திமுக தொண்டர்களால் உருவான இயக்கம். அகில இந்திய அளவில் உட்கட்சி தேர்தல் நடத்தி கிராமக் கிளை செயலாளர் தொடங்கி பேரூர், நகர, ஒன்றிய தலைமை வரை நிர்வாகிகளை தேர்வு செய்யும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது.
1957 ஆம் ஆண்டு திமுக சந்தித்த முதல் பொதுத்தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்றுவரை 63 ஆண்டுகள் ஒரே சின்னத்தில் போட்டியிடும் ஒரே கட்சி திமுகழகம் மட்டுமே கட்சியின் பெயரிலும் கொடியின் வண்ணத்திலும் எந்த மாற்றமும் இல்லை. இத்தகைய சிறப்பும் பெருமைகளும் தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல மாநில கட்சிகளுக்குக் கூட இல்லை.
இப்படிப்பட்ட திமுகழகம் வந்தேறிகளின் சொர்க்க பூமியாக மாறிவிடக் கூடாது. நேற்றுவரை அதிமுகவில் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செந்தில்பாலாஜி, இன்று திமுகவில் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.. இது கட்சித்தாவலை ஊக்குவிப்பதோடு, திமுகவுக்குப் போனால் உடனே பதவி கிட்டும் என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த நிலை மாற வேண்டும் என்பது ஒவ்வொரு திமுக தொண்டனின் ஏக்கமாய் உள்ளது. தொண்டனின் இந்த ஏக்கம் தலைமைக்கு தெரியாமலா இருக்கும்?
- வே.க.இளங்கோ