ஆகஸ்ட் 26ஆம் தேதி கூடிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு மத்திய அரசுக்கு 1,76,051 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்தது. 1,23,414 கோடி ரூபாய் உபரி நிதியாக வழங்குகிறது. கூடுதலாக 52,637 கோடி ரூபாயை ஒருமுறை தொகையாக வழங்குகிறது. உபரி நிதியைத் தவிர ஒருமுறை தொகையும் கூடுதலாக அளிப்பது இதுவே முதல்முறை.
ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகையாக 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு அளிக்கிறது. இதில் ஏற்கெனவே 90,000 கோடி ரூபாயை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்காக மத்திய அரசு பெற்றுவிட்டது. இது கடந்த ஆண்டு பெற்ற நிதியை விட அதிகம். மேலும் 28,000 கோடி ரூபாயை இடைக்கால நிதி (Interim Dividends) என்ற பெயரில் ஆர்பிஐ கொடுத்துவிட்டது. இதனால் மீதி ஆர்பிஐ கொடுக்க இருப்பது 58,000 கோடி ரூபாய்தான்.
ஆர்பிஐ வழங்கும் தொகை இதே அளவுக்கு ஆண்டுதோறும் அரசுக்குக் கிடைக்காது. எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கி அரசுக்கு நிதி வழங்குது சில கட்டுப்பாடுகளின் மூலம் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆர்பிஐ தனது கையிருப்பிலிருந்து அரசுக்கு நிதியை வழங்கலாம். முதலில், மறுமதிப்பீட்டு இருப்பு (Revaluation Reserve) எனப்படும் ஆர்பிஐ வசம் உள்ள தங்கம் மற்றும் அந்நியச் செலாவணியின் மதிப்பு. மற்றொன்று அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கான, எதிர்பாராச் செலவின நிதி (Contingency Fund).
முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு ரிசர்வ் வங்கியின் எதிர்பாராச் செலவின நிதி மொத்த கையிருப்பு 5.5 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை பேணப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. தற்போது ஆர்பிஐ வசம் உள்ள எதிர்பாராச் செலவின நிதி மொத்த கையிருப்பில் 6.8 சதவீதமாக இருக்கிறது. எனவே கூடுதலாக உள்ள 1.3 சதவீதம் நிதியை, அதாவது 52,637 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்க முடிகிறது. எதிர்பாராச் செலவின நிதி போதிய அளவு உள்ள நிலையில், 2018-19 நிதி ஆண்டில் ஆர்பிஐ பெற்ற 1.23 லட்சம் கோடி வருவாயில் ஒரு பகுதியை எதிர்பாராச் செலவின நிதியில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே இதுவும் அரசுக்குக் கொடுக்கப்படுகிறது. எனவே, மொத்தம் 1.76 கோடி நிதி மத்திய அரசுக்குக் கிடைக்கிறது.
அடுத்த ஆண்டிலோ வரும் ஆண்டுகளிலும் இதே அளவு நிதியை மத்திய அரசு பெறும் என்று உத்திரவாதம் இல்லை. பிமல் ஜலான் குழுவின் அறிக்கை ஆர்பிஐ நிதி நிலையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆராய்ந்து, அரசுக்கு வழங்கும் நிதியைக் குறைக்கலாமா என முடிவு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருவாய் இரண்டு வகைகளில் அதிகமாகியுள்ளது. அந்நியச் செலாவணியை விற்பனையில் டாலர்களைக் விற்று மாபெரும் லாபத்தை ஆர்பிஐ ஈட்டியுள்ளது. மேலும், பணச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு பத்திரங்களை வாங்கி, அதற்கு அதிகமான வட்டியைப் பெற்றிருக்கிறது. இதுபோல ஒவ்வொரு ஆண்டிலும் நிறைய வருமானம் ரிசர்வ் வங்கிக்குக் கிடைக்கும் என்று கூற முடியாது.
இத்துடன், ரிசர்வ் வங்கி தற்போது பின்பற்றிவரும் ஜூலை – ஜூன் கணக்கீடு ஆண்டுக்குப் பதிலாக, ஏப்ரல் – மார்ச் நிதி ஆண்டை பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும் என்றும் பிமல் ஜலான் குழு பரிந்துரைக்கிறது. இந்த மாற்றம் வந்தால் இடைக்கால நிதி வழங்குவதற்கான தேவையைப் போக்கலாம்.
அரசின் மொத்த வரி வருவாய் (நேரடி மற்றும் மறைமுக வரிகள் சேர்ந்து) குறையும்போது, வரி அல்லாத வகைகளில் கிடைக்கும் இதுபோன்ற நிதி அதனை ஈடுசெய்ய முடியும். (கடந்த ஆண்டில் மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை 1.7 லட்சம் கோடி.) நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், சரிந்துவரும் பொருளாதார நிலையை சரிசெய்யவும் முடியும். கடந்த நான்கு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியுற்றிருக்கிறது (ஏப்ரல் – ஜூன் காலாண்டின் வீழ்ச்சி ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாகக் கருதப்படுகிறது). இந்த நிதி அரசு கடன் பெறுவதையும் குறைக்கக்கூடும். பொருளாதார மந்தநிலையால் பாதிகப்பட்டுள்ள ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த நிதியைச் செலவிட்டு அத்துறைகளை இழப்பில் இருந்து மீட்கலாம்.
சுருங்கச் சொல்வதென்றால், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெறும் நிதி எல்லா வகைகளில் வாரி இறைக்கும் அளவுக்கு பெரிதல்ல. இந்த நிதி ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தருமா என்ற கேள்விக்கான பதில், அரசு எந்தத் வகைகளில் இந்த நிதியை முதலீடு செய்கிறது என்பதைப் பொருத்தே உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைத்ததன் மூலம் நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கையை 12ஆகக் குறைத்துள்ளார். 27 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பதாக அறிவித்தார்.
பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு துறைகளில் வளர்ச்சி முடங்கியுள்ளது. பங்கு வர்த்தகத்திலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பிலும் சரிவு தொடர்கிறது. பல தரப்பினும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்கின்றனர்.
நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பை ஒட்டியே, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்ற தகவல் வெளியானது.
இச்சூழலில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவு எந்தவகையில், பாதிப்பை ஏற்படுத்தும் சமூக செயல்பாட்டாளர் சகேத் கோகலே விவரித்துள்ளார்.
“சிண்டிகேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை இந்த இணைப்பில் உள்ளன.சிண்டிகேட் வங்கியில் அனில் அம்பானி 1225 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தவில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி சுமார் 11,200 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறார். அனில் அம்பானி 42,000 கோடி கடனை யுனியன் வங்கி மற்றும் கனரா வங்கியிலிருந்தும் பெற்றிருக்கிறார்.
வங்கிகள் இணைப்பு மூலம் இந்த வங்கிகளிடம் உள்ள வாராக்கடன் சுமை மற்ற வங்கிகளின் மீது திணிக்கப்படுகிறது. யுனைட்டெட் வங்கி மற்றும் ஓரியண்டல் வங்கியுடன் சேர்ந்து நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவாக்கப்பட்டிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரிய அளவுக்கு வாராக்கடன்கள் உள்ளன.
இனி ஸ்டேட் வங்கியைக் காப்பாற்றும் நடவடிக்கை என்ற பெயரில் அந்த வகையின் வாராக்கடன்களை இந்த “இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி”யின்மீது போடுவார்கள். இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நான்கு பொதுத்துறை வங்கிகளும் வாராக்கடன்களைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட இருக்கின்றன. பிரதமர் மோடிக்கு விருப்பமான, கோடீஸ்வரர்களால் குவிக்கப்பட்ட அனைத்து வாராக்கடன்களையும் இந்த வங்கிகள்தான் சுமக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி அளித்த உபரி நிதியை (surplus fund) இணைக்கப்பட்ட வங்கிகளுக்குக் கொடுப்பார்கள். ஆர்பிஐ ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சடித்துக்கொண்டே இருக்கும், இந்த வங்கிகள் வட்டியைக் குறைத்து கடன்களை வாரி வழங்கும். மோசமான பொருளாதார சூழலில் மக்கள் குறைந்த வட்டியில் கிடைக்கும் கடனை வாங்குவார்கள். ஆனால், திருப்பிச் செலுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இருக்காது.
பணவீக்கம் மிகையாவதையும் வாராக்கடன்கள் பெருவதையும் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பார்க்கப் போகிறோம். நிர்மலா சீதாராமன் வங்கிகள் இணைப்பு மூலம் மிகப்பெரிய அளவில் பணப்புழக்கத் தட்டுப்பாட்டு ஏற்படுவதற்கு ஆரம்பப் புள்ளியை வைத்துள்ளார்.
அடுத்து 8 வாரங்களில் அரசு ஏதாவது மேஜிக் செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி சரிந்துவரும் துறைகள் அனைத்தையும் மீண்டு, பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால், இந்த ஆண்டின் முடிவில் மாபெரும் வீழ்ச்சியை அடைந்திருப்போம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவவும் வங்கி மோசடி செய்தவர்களைக் காப்பாற்றவும், இனி திருத்தவே முடியாத தவறை நரேந்திர மோடி அரசு செய்திருக்கிறது.
இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை அனுவிக்கப்போகிறவர்கள் யார்? இந்நாட்டு மக்களாகிய நாம்தான். நமக்கு அச்சப்படுவதற்கு போதிய காரணங்கள் கண்டிப்பாக இருக்கின்றன.” என்று சகேத் தன் பதிவில் தெரிவித்துள்ளார்.