இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்..!
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து!
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள், கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி, வருமான வரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.
காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்துசெய்யப்பட்டாலும் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால், தேர்தல் ஆணையம் தவிர, மற்றவர்கள் தலையிட முடியாது என்றும், தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாகவும், நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியன் பிரசாத் அமர்வு தீர்ப்பளித்தது. அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துச் செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில், தலையிட முடியாது என திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.