“வெந்து தணிந்தது காடு” திரை விமர்சனம் – 3/5
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி எனும் கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. கருவேளங்காட்டில் விறகு வெட்டி முட்களை சுத்தம் செய்து குவித்து வைத்திருந்த போது எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்க முற்படும் போது சிம்புவின் உடல் முழுவதும் முட்கள் குத்தி காயங்கள் ஏற்படுகிறது. இதனைப் பார்த்ததும் அவரது தாய் ராதிகா பதற்றம் அடைந்து இதற்காகவா உன்னை கல்லூரி வரை படிக்க வைத்தோம் கதறுகிறார்.
இதன் பிறகு நீ இந்த ஊரில் இருக்க வேண்டாம் என சிம்புவை அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவரிடம் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வழியைக்காட்டுங்கள் என கெஞ்ச அவரும் சம்மதிக்கிறார். எதிர்பாராத விதமாக அவர் மரணமடைய சிம்பு அவர் வேலை பார்த்த மும்பையில் உள்ள புரோட்டா கடைக்குச் செல்கிறார்.
அந்த புரோட்டா கடையில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கூலிப்படையினராகவே இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட எண்ணத்தில் இருக்கும் சிம்பு, எதிர்பாராத விதமாக தான் தங்கியிருந்த அறையில் சண்டை நடந்தபோது துப்பாக்கியை எடுத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கூலிப்படையினர் இவரைத் தங்களோடு சேர்த்துக்கொண்டதோடு , அந்த கும்பலின் தலைவனுக்கு மெய்க்காப்பாளராகவும் சிம்புவை நியமிக்கின்றனர். சொந்த ஊரில் பிழைக்க வழியின்றி குடும்ப கஷ்டங்களை போக்குவதற்காக பிழைப்புத்தேடி மும்பை வந்து, அடிதடி கும்பலிடம் சிக்கிய சிம்புவின் வாழ்க்கை எதை நோக்கிச் செல்கிறது? என்பது மீதிக்கதை…..
இதுவரை சிம்புவை யாரும் கண்டிராத கிராமத்து இளைஞனாக உடல்மொழியை மாற்றி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிம்பு. ஒரு கிராமத்து இளைஞன் நகர்ப்புறத்தில் வசித்தாலும் காதலியைச் சந்தித்து தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக அதாவது தனது உண்மையான வயதைக் குறிப்பிட்டு பேசுவதும், சட்டையை வைத்து முகத்தை துடைத்தும் ஒரு கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்.
படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் ரசிக்கும் படியாக உள்ளது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் தொடர தவறிவிட்டரர் என்றே சொல்லலாம்.