மகனின் அலங்கோலம்… டாஸ்மாக் கடையை எறித்த தாய் ! “ஆலகாலம்” திரைவிமர்சனம்
ஶ்ரீ ஜெய் புரொடக்சன்ஸ் சார்பில், தயாரித்து, இயக்கியதோடு, நாயகனாக ஜெய கிருஷ்ணா நடிப்பில், சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ஆலகாலம்”.
கதைப்படி… விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாயின் வளர்ப்பில் வளர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் சாந்தினியும் படிக்கிறார். அங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பயின்றவர்கள், ஆனால் கிருஷ்ணா தமிழ் வழி கல்வி பயின்றவர். ஆனாலும் கிருஷ்ணாவும், சாந்தினியும் படிப்பில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நிலையில், பின்னர் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து தனியாக வாழ்கின்றனர்.
தன் மகன் பெரிய கல்லூரியில் பெரிய படிப்பு படித்து வருகிறான் என கிராமத்தில் எப்போதும் மகன் புராணம் பேசித்திரியும் தாயிக்கு தெரிந்தால், விபரீதம் ஏதாவது நடந்துவிடும் என கிருஷ்ணா தன் தாயிடம் சொல்லாமல் இருந்து வருகிறார். குடும்ப வறுமையின் காரணமாக கட்டிட வேலைக்கு செல்கிறான். அங்கு மது பழக்கத்திற்கு ஆளாகி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறான்.
காதலுக்காக பெற்றோரை எதிர்த்து, வசதியான வாழ்க்கையை இழந்த சாந்தினி கற்பமாக இருப்பதோடு இவனது நிலையை நினைத்து அழுகிறாள். பின்னர் அவரது அம்மாவிற்கு ஃபோன் பண்ணி அழுகிறாள், அவரும் கண்டு கொள்ளாமல் ஃபோனை துண்டித்து விடுகிறார்.
அதன்பிறகு இவர்கள் வாழ்க்கை என்னானது என்பது மீதிக்கதை..
படத்தின் முதல் பாதியில் கல்லூரி, காதல் என சுவாரஸ்யம் இல்லாமல் கதை நகர்ந்தாலும், பின் பகுதியில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நாயகன். குடி ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். தன் மகன்தான் உலகம் என வாழ்ந்துவந்த தாய், மகனின் அலங்கோலத்தை பார்த்ததும் கதறி அழுது, அதற்கு காரணமான மதுக்கடையை அடித்து நொறுக்கி தீ வைத்து மாண்டு போகும் காட்சி, ஒரு தாய் தன் வேதனையை வெளிப்படுத்திய விதம் எதார்த்தமாக இருந்தது.
சாந்தினி கல்லூரி மாணவி, கஷ்டப்படும் மனைவி என இருவேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கட்டிட மேஸ்திரி கதாப்பாத்திரத்தில் சிசர் மனோகர் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.