கோவை, திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் கல்லாவில் கை வைத்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர், சம்பவத்தன்று காலை சுமார் 11.00 மணி அளவில் அவரது மனைவி கடையில் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரம் பார்த்து டிப் டாப்பாக உடை அணிந்த நபர் கடைக்கு வந்து சில பொருட்களை கேட்டுள்ளார். பின்னர் பிளாஸ்டிக் கவர் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என கூறியுள்ளார். இதனை அடுத்து கடைக்குள் நழைந்த அந்த நபர் தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனவும், பிளாஸ்டிக் இருந்தால் எடுத்து பின்னால் கொண்டு சென்று மறைத்துவிட கூறினார்.
மேலும் உயர் அதிகாரிகள் 4 பேர் அருகில் உள்ள கடைகளில் ரைடில் ஈடுபட்டுள்ளதால் உடனடியாக பொருட்களை மறைத்து வைக்க அவசரப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்த சில பொருட்களை கடையின் பின்புற அறைக்கு எடுத்துச்செல்லும் வேளையில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார். இதனிடையே செல்போனை எடுத்து பேசியபடி டிப் டாப் ஆசாமி நழுவியுள்ளார். பின்னிட்டு மாலை கணக்கு பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தனது கணவரிடம் தகவல் தெரிவிக்கவே உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சென்று விசாரித்தபோது ஒரு கடைக்கு மட்டும் டிப் டாப் ஆசாமி அரசு துறை அதிகாரி என கூறியது தெரியவந்தது. இந்நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மளிகை கடை உரிமையாளரின் மனைவி, உடனடியாக தனது செல்போனில் உள்ள வாட்சாப்பிற்கு வந்த தகவலை பார்த்தபோது கோவை வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையத்தில் உள்ள மளிகை கடையில் கடந்த மாதம் இது போன்று நடித்து ரூ. 5 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த டிப் டாப் ஆசாமியின் அடையாளங்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான டிப் டாப் ஆசாமி புகைப்படம் செய்தித்தாளில் வெளியானதை கண்டு தனது கடைக்கு வந்தது இந்த நபரின் அடையாளங்கள் ஒத்துப்போவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடைசியாக திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி சுரேஷ்குமார் (27) என்பவன் மளிகை கடை கல்லாவில் இருந்த ரூ. 9 ஆயிரத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் போலி அதிகாரி அடுத்த அவதாரம் எடுக்காமல் வியாபாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.