நான்கு வழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி ! அத்துமீறும் அதிகாரிகள் !.? கண்டுகொள்ளாத தமிழக அரசு !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் முதல் கோவை மாவட்டம் ஆச்சிபட்டி வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டி.பி. ஜெயின் நிறுவனம் மேற்கொண்டுள்ள நிலையில், சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதாகவும், பல இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்களும், அப்பகுதியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுசம்பந்தமாக விசாரித்தபோது.. மடத்துக்குளம் முதல் ஆச்சிபட்டி வரை நான்கு வழி சாலையில் ஒன்பது உயர்மட்ட பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பாலத்தின் அடித்தளத்தில் கல்குவாரிகளில் கழிவாகும் கிரஸர் துகள்களை, பாலத்தின் அடிப்பகுதியில் சுமார் ஐந்து அடி அளவுக்கு கொட்டப்பட்டு அதற்கு மேலாக சவுடு மணலைக்கொட்டி தரை தளத்தை உயர்த்துகின்றனர்.
பாலங்களின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில், தரமான பொருட்களை பயன்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, பாலங்கள் உறுதித்தன்மையுடன் நீண்ட காலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒத்துழைக்கும். இல்லையெனில் சமீபகாலங்களில் பெரும்பாலான இடங்களில் திறப்பு விழாவிற்கு முன்போ அல்லது ஒருசில ஆண்டுகளில் பாலங்கள் இடிந்து விபத்துக்களை ஏற்படும் சம்பவங்கள் போல்தான் இந்த பாலங்களிலும் ஏற்படும் என்கிறார்கள்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் உடுமலைப்பேட்டை தளி மேம்பாலம் அருகே, டி.பி. ஜெயின் நிறுவனத்திற்கு சொந்தமான ( MH – 40 BG 1190 ) கனரக வாகனமான டாரஸ் லாரி குவாரியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வரும்போது, இளைஞர் ஒருவர் மீது மோதியதில் இரண்டு கால்களும் நசுங்கிய நிலையில், அந்த இளைஞர் உயிரிழந்தார். பின்னர் விசாரணை மேற்கொண்ட உடுமலைப்பேட்டை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து லாரியின் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் முதல் தகவல் அறிக்கையில், காலியாக வந்த லாரியில் இளைஞர் அடிபட்டு இறந்ததாக பதிவு செய்துள்ளனர். கனரக வாகனங்களை இயக்கும் வடமாநில தொழிலாளிகள் பொறுப்பில்லாமல் வாகனத்தை இயக்குவதால் இந்தப் பகுதிகளில் மட்டுமே இதுவரை பத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்று, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் டி.பி. ஜெயின் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் உதயபானு, அபிஷேக் ஆகிய இருவரும், ஓட்டுநர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்தி விபத்துக்களை ஏற்படுத்தினாலும், அவர்களை கண்டுகொள்வதில்லை. வேலை நடைபெறும் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 70 சதவீதம் பேரும், பிற மாநிலத்தவர்கள் 30 சதவீதம் பேரும் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்தும், முற்றிலும் வடமாநித்தவர்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யும்போது, மூன்று ஆண்டுகளில் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என ஒப்புதல் அளித்துள்ள டி.பி. ஜெயின் நிறுவனம், தற்போது ஐந்து ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், பணிகளை முடிக்காமல் இழுத்துக் கொண்டே செல்கின்றனர்.
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வருகைதரும் அதிகாரிகளுக்கு, மேலாளர்களான அபிஷேக், உதயபானு ஆகிய இருவரும், கனிசமான தொகையை கொடுத்து சரிசெய்து வைத்துள்ளனர். அதிகாரிகளும் மாதாமாதம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நமக்கு வருமானம் வந்தால் போதும், சாலைப் பணிகள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்கிற ரீதியில் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
மேலும் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைவருக்கும், டி.பி. ஜெயின் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் உதயபானு, அபிஷேக் ஆகியோர் மூலம் டி.பி. ஜெயின் நிறுவனம் மாதந்தோறும் பணம் கொடுத்து, அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைத்து வருவதால், நடவடிக்கை எடுப்பது என்னவோ சந்தேகம்தான், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுப்பணம் தான் விரையமாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், நீதிமன்றத்தை நாடவும் தயாராகி வருகின்றனர்.
எது எப்படியோ மக்களின் வரிப்பணம் வீணாகாமல், தரமான சாலைகளும், பாலங்களும் அமைந்தால் சரி.
செய்தியாளர்
– சாதிக் பாட்சா