திருப்பூர் அருகே சிக்கலைத் தீர்க்க சைக்கிள் பயணம் ! கக்கனாக மாறிய பேரூராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சாமளாபுரம் பேரூராட்சி. இப்பகுதியில் சுமார் 30,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சாமளாபுரம் பேரூராட்சியின் தலைவராக போட்டியிட்ட விநாயகா பழனிச்சாமி வெற்றிபெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் பதவியேற்ற நாள் முதலே எறும்பு போன்று சுறுசுறுப்பாக செயல்படும் விநாயகா பழனிச்சாமி நாள்தோறும் காலை சுமார் 6 மணி அளவில் வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பி சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தண்ணீர் திறந்து விடுபவர்களை சந்தித்து ரோல்கால் நடத்தும் தலைவர், அவரவருக்கு ஒதுக்கப்படும் பணிகள் குறித்து சரிபார்த்து அனுப்பி வைப்பார்.
பின்னர் தனது சைக்கிளில் பயணத்தை மேற்கொள்ளும் தலைவர் ஒவ்வொரு வார்டாக சென்று அங்குள்ள வீடுகளுக்கு சென்று பொது மக்களின் குறைகளையும் சிக்கல்களையும் கேட்டறிந்து உடனுக்குடன் அதற்குண்டான தீர்வுகளை ஏற்படுத்திவருகிறார். மேலும் தினமும் சுமார் 18 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் விநாயகா பழனிச்சாமி சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனது சைக்கிளில் சென்று வீடு வீடாக பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நீண்டநாள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்பு காட்டி வருகிறார். மற்ற பேரூராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் விநாயகா பழனிச்சாமி கக்கன் வழியை கடைபிடித்து எளிமையாக அனைவரையும் நேரில் சந்திக்க கூடியவராக, எதிர்கால சந்ததியினருக்கு எளிமையின் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.