அரசியல்தமிழகம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவரும் பா.ஜ.க. கல்யாணராமன்… : தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?

இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழகத்திலும் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த பா.ஜ.க. அதை சகித்துக்கொள்ள முடியாமல் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கத் துடிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இலட்சக்கணக்கான இசுலாமியர்கள் பெண்கள், வீதிக்கு வந்துப் போராடிய போது, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.

தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பா.ஜ.வைச் சேர்ந்த கல்யாணராமன் என்கின்ற பேர்வழி, கோடிக்கணக்கான மக்கள் போற்றி வணங்கும் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துகளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.

இந்தப் பேர்வழி தந்தை பெரியாருக்கு எதிராகவும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினர் மீது வன்மத்துடனும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசி அவதூறு செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மதவன்முறைகளைத் தூண்டவும், அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்ற நப்பாசையுடனும் கல்யாணராமன் போன்ற இழி பிறவிகளை ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பல் பின்னணியில் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு தமிழக அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக நல்லிணக்கத்தினை விரும்புவோரும் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் வெள்ளிக்கிழமை, இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகி கல்யாணராமன், இஸ்லாமியர்கள் இறைத் தூதராக வழிபட்டு வரும் நபிகள் நாயகம் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து திட்டமிட்டு பேசி வருவதாகவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டிடவும் மதமோதல்களை தடுக்கவும் கல்யாணராமனை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், தெற்குவாசல் சின்னக்கடைத் தெரு, அண்ணாநகர் பள்ளிவாசல், மகபூப்பாளையம் பள்ளிவாசல், களிமங்கலம் உள்பட 5 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத், பாப்புலர் ப்ரண்ட், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், முஸ்லிம்லீக், விமன் இந்தியா மூவ்மெண்ட், மஜ்லிஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button