விவசாயம் காக்க அறவழியில் களமிறங்கிய பெண்கள்.! பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்ட்ம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் கிராமம் தற்போது செய்திகளத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி தனி மனித அறவழிப்போராட்டத்தில் விவசாயிகளும், பச்சைதுண்டுடன் நாங்களும் விவசாயிகள் தான் என கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கானோரை திரட்டி வந்து லட்சக்கணக்கில் விளம்பரப்படுத்தி தங்களது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாக கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய போராட்டமும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோடங்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இச்சிப்பட்டியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் தனது விவசாய பூமி அருகில் உள்ள கல்குவாரியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி பத்து நாட்கள் தனி நபராக உண்ணாவிரதம் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் அந்த கல்குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் கோடங்கிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 11 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கல்குவாரி உரிமையாளர் சங்கம் சார்பில் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டி போராட்டம் நடத்திவருவதாக கூறி காரணம்பேட்டையில் சுமார் 2500 பேரை திரட்டி பிரமாண்ட பந்தல் அமைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கல்குவாரி உரிமையாளர்கள் பச்சை துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 15.09.2022 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10 பெண்கள் விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கினர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து இரண்டாவது நாளாக இன்று அறவழியில் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கோடங்கிபாளையத்தில் தொடர்ந்து வருகின்றனர்.
கோடங்கிபாளையத்தில் செந்தில்குமார் வீட்டருகே துவங்கப்பட்டுள்ள கல்குவாரி, விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், அருகில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளும் தொகுப்பு வீடுகளும் 2014 ஆம் ஆண்டு முதலே உள்ளதாகவும், இதனை மறைத்து கல்குவாரிக்கு அனுமதி அளிதிருபதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஊடகங்கள் வாயிலாக ஆதாரமற்ற பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள் போராட்டம் அறவழியில் நடப்பதால் தான் தற்போது பெண்களும் போராட்டதில் குதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரி மீது உயர்மட்ட குழு அமைத்து உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்துவது அரசின் கடமை. இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காலதாமதம் இன்றி போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.