சுகாதாரமற்ற பல்லடம் அரசு பொது மருத்துவமனை…. பேருந்து நிலையத்திற்கு படையெடுக்கும் நோயாளிகள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு, பிரசவ வார்டு என பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பல்லடம் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குளியளறைக்கும், கழிவறைக்கும் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கழிவறை செல்ல தினமும் பல்லடம் பேருந்து நிலையத்தை நோக்கி படையெடுக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 20 நாட்களாக வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் வார்டுகளில் துர்நாற்றம் வீசி நோயாளிகள் சுகாதாரமற்ற சூழலில் மருத்துவ மனையில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் பிரேம லதா ஆய்விற்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அங்கிருத நோயாளிகள் இணை இயக்குநரிடம் தங்களது குறைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பானில் அசுத்தமான குடிநீர் இருப்பதாகவும் , வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதையும் நேரில் அழைத்துச்சென்று இணை இயக்குநர் பிரேமலாதாவிடம் காண்பித்தனர். பின்னர் அங்கிருந்த மருத்துவ ஊழியர்களை கடுமையாக எச்சரித்து உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். கடந்த 20 நாட்களாக பல்லடம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் கழிவறையை பயன்படுத்த பஸ்ட்டாண்ட் நோக்கி நோயாளிகள் படையெடுத்த அவல நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.