மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட் 19 என்ற சிறப்புத்திட்டம் தொடக்கம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 4 நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படக்கூடிய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட் 19 என்ற சிறப்புத்திட்டத்தை கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5000 அதிகபட்சமாக ஒரு குழுவிர்க்கு ரூ.1 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். 50 குழுக்களில் உள்ள 684 உறுப்பினர்களுக்கு ரூ.34.20 இலட்சம் கடன் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 2539 சுய உதவிகுழுக்களில் உள்ள 40556 உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.21 கோடி கடன் வழங்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ் 2019-&2020 ஆம் ஆண்டில் 83 விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.4.15 கோடி மூலதன நிதி வழங்கி அவர்களுக்கு 352 வேளாண் பண்ணை கருவிகள் வழங்கப்பட்டது. ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பவர் டில்லர் மற்றும் இதர கருவிகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு. கந்தசாமி இ.அ.ப., ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் மற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலேயே கொரோனா சிறப்புத் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு 21 கோடி ரூபாயை முதன்முதலில் கடனாக கொடுத்தது திருவண்ணாமலை மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஆ.கன்னியப்பன்