தமிழ்நாட்டில் சிலம்ப விளையாட்டிற்கு அவமதிப்பா?
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் சிலம்ப விளையாட்டு தற்போது கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடில் சிலம்ப விளையாட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக சிலம்பாட்டம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து சிலம்பாட்டத்தை விளையாட்டாக அங்கீகரித்து மாநில அளவில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 3 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது. அதன்பிறகு சிலம்ப விளையாட்டு முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
இந்நிலையில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் சிலம்ப விளையாட்டு இடம்பெற்றிருந்தது. இதனிடையே சமீபத்தில் மாநில அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டிகள் சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தில் நடைபெற்றது. ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை சுருள்வாள், அலங்கார சிலம்பம், மான் கொம்பு என 5 பிரிவுகளில் நடைபெற்றது.
பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுப்பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 20 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டு போட்டியாளர்களின் திறமைக்கேற்ப்ப மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் கரூரை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர் ஒருவர் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட போட்டியில் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்ட பிறகு தமிழக அரசால் வழங்கப்பட்ட சான்றிதழை கிழித்தெரிந்து வீடியோவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூக வளைதளங்களில் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிலம்பாட்ட விளையாட்டில் ஏன் இந்த குழப்பம் என விசாரித்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலம்ப விளையாட்டு போட்டிகளில் நடுவர்களாக அரசுப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்துகின்றனர். இந்நிலையில் சிலம்ப விளையாட்டுக்கென எந்த விதிமுறைகளும் பொதுப்படையாக உருவாக்கப்படவில்லை என கூறப்படுகிறது. உதாரணத்திற்கு மாவட்ட போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் பயன்படுத்திய ஒற்றை சுருள்வாள் மூன்று இலைகள் குறுத்த குழம்பங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பயிற்சியாளர்கள் பல்வேறு அமைப்புக்களை சார்ந்தவர்களாகவும் உள்ளதால் நடுவர்களின் செயல்பாடுகள் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் ஒருதலைபட்சமாக மதிப்பெண் வழங்கியதாகவும், சிலம்ப விளையாட்டு அடிப்படை குறித்து தெரியாதவர்கள் நடுவர்களாக பணியாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மற்ற விளையாட்டுக்களை போல் இல்லாமல் முதல் முறையாக மிகப்பெரிய அங்கீகாரம் சிலம்ப விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
மேலும் சிலம்ப விளையாட்டில் முனைவர் பட்டம் பெற்றவர்களை கொண்டு போட்டிகளை நடத்தினாலும், தொழில் நுட்ப வல்லுநர்களாக சிலம்ப விளையாட்டில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமித்தால் இது போன்ற குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலும் தனித்திறமை போட்டிகளுக்கு பதிலாக தொடுமுறை விளையாட்டாக துவக்கத்தில் அறிமுகம் செய்து பின்னர் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு குழு அமைத்து போட்டிகளுக்கான விதிமுறைகளை வகுத்து பின்னர் அது குறித்து போட்டியாளர்களுக்கு பயிற்சியும், நடுவர்களுக்கு உரிய பயிற்சிமுகாமும் ஏற்படுத்தினால் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்ப விளையாட்டு உலகை ஆளுவது உறுதி.
– நமது நிருபர்