பயோடீசல் என்கிற பெயரில் கலப்பட டீசல் விற்பனை..! : அரசு நடவடிக்கை எடுக்குமா..?
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பயோடீசல் என்கிற பெயரில் கலப்பட டீசல் அமோக விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்கெட்டில் விற்பனை செய்யப்படும் டீசலின் விலையை விட 1 லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் இந்த டீசலை தங்கள் வாகனங்களில் நிரப்பிக் கொள்ள லாரிகள் பல மணிநேரம் காத்திருந்து கலப்பட டீசலை நிரப்பிச் செல்கிறார்கள்.
நாடு முழுவதும் கச்சா எண்ணெயின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இதற்கு மாற்றாக பயோடீசலை பயன்படுத்த நீண்டகாலமாக வாகன உரிமையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அரசாங்கமும் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாத நிலையில் சில லாரி உரிமையாளர்கள் மண்ணெண்ணை, நேப்தா, பாலிதின் தின்னர், இதோடு எஞ்ஜின் ஆயில் போன்றவற்றை கலந்து பயோ டீசல் என்கிற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இந்த டீசலை உபயோகித்தால் வாகனங்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதாவது பதினைந்து ஆண்டுகள் இயங்கக் கூடிய வாகனங்கள் ஏழு ஆண்டுகளில் பழுதாகி விடுமாம். இந்த டீசலை உபயோகிக்கும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையானது வெள்ளை நிறத்தில் வெளிவருகிறது.
இப்போது கள்ளத்தனமாக அதாவது வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் டீசலின் விலையை விட ஐந்து ரூபாய் லிட்டருக்கு கம்மியாக விற்பனை செய்யப்படுவதால் லாரி உரிமையாளர்கள் இந்த டீசலை வாங்க வரிசையாக நிற்கிறார்கள். இப்போது விலை குறைவாக இருப்பதால் இதற்கு வரவேற்பு அமோகமாக இருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் இதன் பாதிப்பு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணராமல் இந்த டீசலை வாங்கி பயன்படுத்துகிறார்கள் வாகன உரிமையாளர்கள்.
இந்த கலப்பட டீசல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. லைட் மஞ்சள், லைட் பச்சை ஆகிய நிறங்களில் விற்பனை செய்கிறார்கள். இதன் நிறங்கள் கிடைப்பதற்கு ஒருவகை கெமிக்கலை மண்ணெண்ணை, நேப்தா, பாலிதின், தின்னர் இதோடு எஞ்ஜின் ஆயில் ஆகியவற்றோடு கலப்படம் செய்வதால் இந்த இரண்டு நிறங்கள் கிடைக்கிறதாம். இந்த கெமிக்கல் 50 மில்லி பத்தாயிரம் ரூபாயாம்.
இந்த வகை டீசலை விற்பனை செய்ய தற்போது வரை யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. ஆனால் தைரியமாக நாமக்கல் மாவட்டத்தில் சங்ககிரி ஏரியாவில் தைரியமாக சாலை ஓரங்களில் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்துக் கொண்டு டேங்கர் லாரிகளில் இருந்து நேரடியாக லாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் டீசல் விற்பனை செய்கிறார்கள். இந்த டீசலை உபயோகிக்கும் லாரிகளில் இருந்து நச்சுத்தன்மை அதிகமாக வெளிப்படுகிறது. இந்த வகை டீசலை உபயோகித்து சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது வாகன சோதனையில் அதிகாரிகளிடம் பிடிபட்டால் ஐந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராத வசூல் செய்யப்படுமாம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த வகை டீசலை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து மோட்டார் வாகனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற கெமிக்கல் டீசலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசலின் விலையையும் கணிசமான அளவு குறைத்தால் மட்டுமே மோட்டார் வாகனத் தொழில் சிறப்பாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்து பெட்ரோல் டீசலின் விலையையும் குறைக்க வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் போலியான பயோ டீசல் விற்கப்படுவதாக தமிழக பெட்ரோலிய டீலர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் நெடுஞ்சாலைகளில் டேங்கர் லாரிகளில் வைத்து பாதுகாப்பில்லாமல் நேரடியாகவே பயோ டீசல் என்றும் கலப்பட டீசலை விற்பனை செய்ய இருப்பதாக தகவல் இவர்களுக்கு வந்துள்ளதாம். இதுசம்பந்தமாக அதிகாரிகளும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மோட்டார் வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
- நமது நிருபர்.