பல்லடம் அருகே காவல் ஆய்வாளர் மகனிடம் வழிப்பறி, போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் குடியுருந்து வருபவர் பூபாலன், பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இரவு முகத்தில் ரத்தக்காயத்துடன் உடைகள் கிழிந்த நிலையில் பல்லடம் காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பதற்றத்துடன் வந்த பூபாலன் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் மாதப்பூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி தன்னிடம் இருந்த செல்போன், பணம், தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றதாக புகார் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூபாலன், தன்னுடைய தந்தை காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், அவினாசிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்துவிட்டு பின்னர் மாதப்பூர் வழியாக பைக்கில் வந்துகொண்டிருந்த போது சாலையில் நின்றிந்த இளைஞர் ஒருவர் கைகாட்டி லிப்ட் கேட்டதாகவும், பின்னர் கத்திமுனையில் கடத்திச்சென்று ஒரு இடத்திற்கு கூட்டிச்சென்று அங்கு இருந்த இருவருடன் சேர்ந்து மூவருமாக சேர்ந்து சரமாரியாக தாக்கி பின்னர் செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து பின்னர் பூபாலை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ATM கார்டை பறித்துக்கொண்டு ரூபாய்.13 ஆயிரத்தை எடுத்துவிட்டு மேலும் பணம் கேட்டு மிரட்டியதாக கூறினார். மேலும் தங்கச்செயினையும் பறித்துக்கொண்டு பின்னர் பைக்கை கொடுத்து அங்கிருந்து துரத்திவிட்டு மூவரும் தப்பிவிட்டதாக கூறினார்.
இதனிடையே குற்றப்பிரிவு காவல்துறையினர் பூபாலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சம்பவம் குறித்து பூபாலன் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளிப்பதாலும், பயன்படுத்திய பைக்கில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதும் வேறு ஏதேனும் காரணமா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறா? பெண் விவகாரம் காரணமா? அல்லது உண்மையாக வழிப்பறி கும்பலின் கைவரிசையா என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவரும். காவல்துறை ஆய்வாளரின் மகனிடம் வழிப்பறி செய்ததாக கூறப்படும் சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.