மாவட்டம்

உடுமலை அடுத்துள்ள சின்னாறு – மூணார் குறுகிய சாலையால் சுற்றுலா பயணிகள் அவதி !

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும்‌. இதனையடுத்துள்ள சின்னாறு வனப்பகுதி வழியாக கேரள மாநிலத்தின் மூணார் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.  9/6 சோதனை சாவடி முதல் சின்னாறு சோதனை சாவடி வரை தமிழக நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த வழித்தடமாகும். இந்த சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் அதிகளவில் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை நிர்வாக அலுவலர்கள் அதனை கண்காணிக்காமல் தற்போது வரை அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே சின்னாறு, மூணார் செல்லும் சாலையில் ஆட்டோ, கார் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலத்த காயமடைந்தனர். அதில் பயணித்த சிறுவயது குழந்தையும் பாதிக்கப்பட்டது‌. அதேபோல வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை கூட காட்டு யானை துரத்தி வந்த சம்பவமும் நடந்துள்ளது. உடுமலையில் இருந்து மூணார் பகுதிக்கு நாள் தோறும் அதிகளவில் வாகனங்கள் சென்றுவரும் நிலையில், சாலையை அகலப்படுத்துவதில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சமரசமற்ற நிலைதான் தற்போது வரை நிலவி வருகிறது.

இதுசம்பந்தமாக உடுமலையில் உள்ள ஆளும் கட்சி பிரமுகரிடம் கேட்டபோது, அவருடைய பார்வையில் மூணார் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வது சம்பந்தமாகவும், வன விலங்குகளை பாதுகாப்பது தொடர்பாகவும் விவரிக்க பேசத் தொடங்கினார். அப்போது வனத்திற்கு நடுவே அமைந்துள்ள சாலையை கடந்து அமராவதி அணை பகுதியில் விலங்குகள் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். இன்றைய சூழலில் எத்தனையோ டெக்னாலஜி புதிது புதிதாக வந்துவிட்டன. வன விலங்குகள் சாலையை கடப்பதற்கு குறிப்பிட்ட தூரத்தில் சிக்னல் அலாரம் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் வாகன ஓட்டிகள், வன விலங்குகள் வருவதை முன்கூட்டியே அறிந்து, வன விலங்குகள் சாலையை கடக்கும் வரை காத்திருந்து, விலங்குகள் சாலையை கடந்த பிறகு வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக செல்ல வழிவகை செய்யலாம். வன விலங்குகளுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது‌.

இதனை இப்போதுள்ள சூழலில் நடைமுறைக்கு கொண்டு வருவது சாதாரண விசயம். ஆதலால் வனத்துறை அதிகாரிகள் வன விலங்குகளையும், வனத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்டது அதனை பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதாக தெரிவித்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வாகனம் கேரளாவுக்கு அதிகளவில் படையெடுத்துள்ளனர்.
இதனால் சின்னாறு வனப்பகுதியில் எஸ் வளைவு எனப்படும் இடம் குறுகலான சாலை அமைப்பு கொண்ட பகுதி என்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

மேலும், அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். குறுகிய சாலை என்பதால் ஒரு வாகனம் செல்லும் போது எதிரே மற்றொரு வாகனம் வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் சுற்றுலாத்துறை, வனத்துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும் சரியான சிஷ்டமேட்டிக் செய்வதற்கான அதிகாரிகள் இல்லாததால் இன்னும் சுற்றுலாத்துறையும், வனத்துறையும் வளர்ச்சியடையாமல் உள்ளன.

இதில் நெடுஞ்சாலைத்துறை மட்டும் விதிவிலக்கு அல்ல, எனவே இப்பகுதியில் விடுமுறை நாட்களில் கூடுதல் வனப் பணியாளர்களை நியமனம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்து சுற்றுலா பயணிகளுக்கும், வன விலங்குகளுக்கும் இடையூறு ஏற்படாமலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள், வன விலங்குகள் என எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாகவும் எழுந்துள்ளது.

– கா. சாதிக் பாட்ஷா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button