திருப்பூரில் பத்திரப்பதிவில் ரூ.1.40 கோடி இ-சலான் மோசடி… : சிபிஐ விசாரணைக்கு பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் – உழைக்கும் தொழிலாளர்களின் சொர்க்க பூமி. பின்னலாடை துறையில் சரவதேச துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் உழைப்பினால் ஒரு லட்சம் கோடி வர்த்தக இலக்கை நோக்கி பின்னலாடை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சத்தமே இல்லாமல் பத்திர பதிவு துறையில் செய்த முறைகேடு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை உறைய வைக்கும் பத்திர பதிவு துறையில் நடைபெற்ற முறைகேட்டில் நடந்தது என்ன? – திருப்பூர் மாவட்ட பதிவாளர் மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகம் மேலும் இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்கள் என நான்கு அலுவலகங்கள் தனித்தனியாக இயங்கி வந்த நிலையில் நான்கு அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து ஒரே அலுவலகமாக நகருக்கு வெளியே உள்ள நெருப்பரிச்சலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பத்திர பதிவில் அதிக அளவில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழக பத்திர பதிவு துறை தலைவர் சங்கர் உத்தரவின் பேரில் கோவை மண்டல துணை பத்திர பதிவுத்துறை தலைவர் ஜெகதீசன் தலைமையில் திருப்பூர் பத்திர பதிவு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் உதவி சார்பதிவாளராக பணியாற்றி வரும் விஜயசாந்தி, திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் இரண்டில் உதவி சார்பதிவாளராகப் பணியாற்றி வரும் முத்துக்கண்ணன் மேலும் திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றி வரும் சங்கர், இளநிலை உதவியாளரான மோனிஷா திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் இரண்டின் உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகிய 5 பேர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி அரங்கேறியது எப்படி என அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமாகின. நகரின் மத்தியில் நீண்ட காலமாக காலியாகவுள்ள, 50 சென்ட் இடத்துக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பு என்று தோராயமாக முதலில் மதிப்பிடுவார்கள். அந்த மதிப்பிற்குரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணத்தை வாடிக்கையாளர் முதலில் செலுத்துவார்.
பின்னர் சார்பதிவாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து உண்மையான சந்தை மதிப்பை நிர்ணயம் செய்வார்கள் அந்த உண்மையான சந்தை மதிப்பிற்கான முத்திரைத் தாள் கட்டணம், குறைவு முத்திரைக் கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வித்தியாசத் தொகையை வாடிக்கையாளர் பத்திரப் பதிவுத் துறையின் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது பற்றி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால், அதையும் பத்திர எழுத்தர்களே தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்துவார்கள். அதற்குத் தனியாக கட்டணம் சேர்த்து மொத்தத் தொகையையும் வசூலித்து விடுவார்கள். அப்படி செலுத்தப்பட்ட தொகைக்கான ரசீது ஸ்கேன் செய்யப்பட்டு ஆவணமாக இணைக்கப்படும். அசல் ரசீதுகள் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
இந்த ரசீதுகளை வைத்துதான் சார்பதிவாளர் அலுவலகத்தின் உதவியாளர்கள் விளையாடி உள்ளார்கள். சார்பதிவாளரின் யூசர் நேம், பாஸ்வேர்டு உதவியாளர்களுக்குத் தெரியும். அவற்றை வைத்து அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரங்களில், அந்த ரசீதுகளை ரத்து செய்வார்கள். ரத்து செய்யப்பட்ட உடன் அந்தக் கட்டணம், பணத்தை செலுத்திய பத்திர எழுத்தரின் வங்கிக் கணக்கிற்குத் திரும்பச் சென்று விடும். அந்தப் பணத்தை பத்திர எழுத்தர்களும், சார்பதிவாளர் அலுவலகத்தின் உதவியாளர்களும் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தின் பல சார்பதிவாளர் அலுவலகங்களில், இ&சலான் மோசடி அரங்கேறியுள்ளது. இப்படி ஒரு மாவட்டத்திலேயே ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி அரங்கேறியதைப் பார்க்கும்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
திருப்பூர் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த இ&சலான் மோசடி வெளியானதை அடுத்து, பொதுமக்களிடம் தாங்கள் செலுத்திய நிலுவைத் தொகை குறித்த அச்சம் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற மோசடி பல ஆண்டுகளாக நடந்திருந்தால் மோசடித் தொகை பல கோடியைத் தாண்டும் என்பதில் சந்தேகமில்லை. சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
– நமது நிருபர்