அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அவருடைய பினாமி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் மாவட்ட ஆணையர்களிடம் புகார் கொடுத்தது. ஆனால் இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்க நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெண்டர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமிகள் மற்றும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் முதல் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு இடங்களில் சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் போன்றவைக்காக சுமார் ரூ.66.75 கோடி மதிப்புள்ள டெண்டர்கள் கே.சி.பி., எஸ்.பி.பில்டர்ஸ் மற்றும் வரதன் இன்ப்ரா-ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கே.சி.பி., நிறுவனத்தின் பங்குதாரர்களான கே.சந்திரபிரகாஷ், ராபர்ட் ராஜா ஆகியோர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதேபோல, சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ள ரூ.14 கோடி மதிப்புள்ள டெண்டர்களும் அமைச்சரின் நண்பர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.20 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிறுவனங்களே சென்னை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு டெண்டர்களில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு, வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கே.சி.பி. நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களின் மூலம் அந்நிறுவனம் கடந்த 2014-15-ம் ஆண்டுகளில் ரூ.100.20 கோடியும், 2015-16-ம் ஆண்டுகளில் ரூ.167.22 கோடியும், 2016-17-ம் ஆண்டு ரூ.142.24 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது.
இதன் மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல கோடி ரூபாய் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக கவர்னரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர், சென்னை, கோவை மாநகராட்சி ஆணையர்களையும் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், அவர்களும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.